பினாங்கு அம்னோ இளைஞர்கள், அண்மையில் பினாங்கில் நிதிதிரட்டும் விருந்துபசரிப்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் பேசியதை அடிப்படையாக வைத்து இன உணர்வுகளைத் தூண்டிவிட முயல்கிறார்கள் என்று லிம்மின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோஹாரி சாடியுள்ளார்.
லிம் தமதுரையில் சீனர்களின் 90விழுக்காட்டு ஆதரவையும் மலாய்க்காரர்களின் 40விழுக்காட்டு ஆதரவையும் மட்டுமே எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார் என மாநில அம்னோ இளைஞர் தலைவர் ஷேய்க் உசேன் மைடின் சினார் ஹரியானிடம் கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதை ஜைரில் சுட்டிக்காட்டினார்.
“இந்தியர் ஆதரவு பற்றி லிம் குறிப்பிடவில்லை”,என்று ஷேய்க் உசேன்னை அச்செய்தித்தாள் மேற்கோள்காட்டி காட்டியிருந்தது.
“அவரது கூற்று தவறு.தீய நோக்கம் கொண்டது.குறிப்பாக இந்தியர்களின் இன உணர்வைத் தூண்டிவிடும் நோக்கத்துடன் அவ்வாறு கூறியுள்ளார் என்று ஜைரி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“லிம் உண்மையில் மலாய்க்காரர்-அல்லாதாரிடமிருந்து 90 விழுக்காடு ஆதரவை எதிர்பார்ப்பதாகத்தான் கூறினாரே தவிர சீனர்களை மட்டும் தனித்துக் குறிப்பிடவில்லை”, என்றவர் விளக்கினார்.
தாம் சொல்வது உண்மை என்பதை மெய்ப்பிக்க மெண்டரின், ஹொக்கியான், மலாய் மொழியில் அமைந்த லிம்மின் உரை படிவத்தையும் அவர் காண்பித்தார்.