இலங்கை மீது விசாரணை நடத்தகோரி மலேசிய ஐ.நா தூதரகத்தில் மனு

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசாங்கம் மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி இன்று (21.03.2012) மதியம் 11.30 மணிக்கு Wisma UN, Blok C, Jalan Dungun, Damansara Height, KL-ல் அமைந்துள்ள மலேசியாவுக்கான ஐ.நா தூதரகத்தில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்படவுள்ளது.

இந்த கோரிக்கை மனு ஐ.நா தூதரகம் மூலம் இன்று மலேசியா வரவுள்ள ஐ. நா செயலாளர் பான் கீ மூனின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கோரிக்கை மனு வழங்கப்படும் நேரத்தில் ஐ.நா பணிமனை முன்பாக ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி இடம்பெறவுள்ள பேரணியில் மலேசியத் தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009-ஆம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சுமார் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை, சிங்கள இனவாதிகளின் தலைமையிலான இலங்கை அரசு, கொடூரமாகப் படுகொலை செய்திருந்ததானது உலகத் தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக பதிந்துள்ளது.

தற்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள இவ்வேளையில், தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி உலகின் பல பாகங்களில் தமிழர்கள் மட்டுமன்றி மனித உரிமை ஆர்வாளர்கள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: