பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது பிறந்த நாள் விருந்து தொடர்பில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் கூறப்படுவதிலிருந்து கோலாலம்பூரில் உள்ள ஷாங்ரிலா ஹோட்டல் அவரை மீண்டும் விடுவித்துள்ளது.
2011ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் தேதி நடந்த அந்த விருந்துக்கான 80,000 ரிங்கிட் மொத்தச் செலவுகளுக்கு நஜிப் முழுமையாக பணம் செலுத்தினார் என அந்த ஹோட்டல் நிர்வாகம் விடுத்த சுருக்கமான அறிக்கை கூறியது.
அந்த விருந்து நிகழ்வு முழுமையாக நிறைவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி பிரதமரிடமிருந்து ஹோட்டலுக்கு முழுத் தொகையும் கிடைத்தது,” என பிரி மலேசியா செய்தி இணையத் தளம் எழுப்பிய கேள்விக்கு அது பதில் அளித்தது.
பிகேஆர் பத்திரிக்கைகளுக்கு வழங்கிய, புத்ரா ஜெயாவில் உள்ள நஜிப்பின் அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ பெர்டானா நடைபெற்ற அந்த விருந்துக்கான நிகழ்வு அளிப்பாணை (banquet event order-BEO) உண்மையானது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்த அளிப்பாணையின் படி உணவு சுவை பானங்களுக்கு 21,495 ரிங்கிட்டும் மலர் அலங்காரங்களுக்காக 31,800 ரிங்கிட்டும், இரண்டு இசைக் குழுக்களுக்கு 13,038 ரிங்கிட்டும் செலவு செய்யப்பட்டதாகவும் 100 பேர் கலந்து கொண்ட அந்த விருந்தில் பரிமாறுவதற்கான (handling charge) கட்டணமாக 12,720 ரிங்கிட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
பிகேஆர் அம்பலப்படுத்தியுள்ள இரண்டாவது விருந்து நிகழ்வு அளிப்பாணை இதுவாகும். நஜிப்புதல்வி நூர்யானா நாஜ்வாவின் திருமண நிச்சயதார்த்த விருந்து நிகழ்வு அதே இடத்தில் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்றது.
அந்த விருந்துக்கான செலவு 400,000 ரிங்கிட் என்றும் அதற்கான பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறும் BEO அளிப்பாணையையும் பிகேஆர் காட்டியது. ஆனால் அதற்கான பில்-லை பிரதமர் கட்டினார் என்றும் ஷாங்ரிலா பின்னர் கூறியது.
அந்த விருந்துகள் தொடர்பான விஷயங்கள் அம்பலமானதும் மிதமான போக்கை வலியுறுத்தும் நஜிப் மக்கள் தங்கள் செலவுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் வேளையில் அதிக ஆடம்பரத்தைக் கொண்ட விருந்துகளை நடத்துவதாக அவர் குறை கூறப்பட்டார்.