சர்ச்சைக்குரிய வலைப்பதிவரான ராஜா பெட்ரா கமருடினுடன்(ஆர்பிகே) பொது விவாதத்தில் ஈடுபடுவது “ஒரு தங்கமான வாய்ப்பு” அதை உதறித்தள்ளிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் செயலைக் கண்டு பினாங்கு என்ஜிஓ ஒன்று வியப்புத் தெரிவித்துள்ளது.
அன்வார், ராஜா பெட்ராவுடன் பொதுவிவாதத்தில் கலந்துகொள்ள மறுத்தது மலாய்க்காரர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று கூறும் பினாங்கு மலாய் காங்கிரஸ் (பிஎம்சி),வலைப்பதிவரை நேருக்கு நேர் சந்திக்க மாற்றரசுக் கட்சித் தலைவர் அஞ்சுவதைத்தான் அது காட்டுகிறது என்று குறிப்பிட்டது.
“ஆர்பிகே-இடம் எதைக் கண்டு அன்வார் அஞ்சுகிறார்?”, என பிஎம்சி தலைவர் ரஹ்மாட் இஷாக் வினவினார்.
“அன்வார் மறுப்பதைக் காண்பவர்கள் அவர்கள் இருவருக்குமிடையில் தனிப்பட்ட பகை இருப்பதாகத்தான் நினைப்பார்கள்”, என்றாரவர்.
அன்வார், விக்கிலீக்ஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்துகொண்டிருக்க வேண்டும்;பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் அது அவரது அரசியல் நிலையை வலுப்படுத்திக்கொள்ள உதவும் என்றாரவர்.
பிரிட்டனின் கெண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கிலிருந்து தம் பெயரை நீக்கி விடுமாறு கேட்டுக்கொண்ட அன்வாரை “ஒரு பயந்தாங்கொள்ளி” என்று ராஜா பெட்ரா வருணித்தார்.
ராஜா பெட்ராவுடன் விவாதம் செய்வதைத் தவிர்த்தது ஏன் என்பதை அன்வார் விளக்க வேண்டும் என ரஹ்மாட் வலியுறுத்தினார். அது நாட்டின் உயர்த் தலைவர்களில் ஒருவரான அவரின் உண்மையான பண்பை மக்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.