போலீஸ் அதிகாரியின் மரணம் பினாங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஜார்ஜ் டவுன் ஒசிபிடி அகமட் பக்தியார் காசிம் திங்கட்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார்.

நேற்று மாலை அவர் ஆன்சன் சாலையில் உள்ள பினாங்கு பௌத்த சங்கத்தில் பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் சுவாசிக்க முடியவில்லை என்றும் புகார் செய்த பின்னர் மயக்கமுற்றார்.

54 வயதான அகமட் பக்தியார் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க போலீஸ் அதிகாரி என வருணிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர்.

அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படுவதற்காக அவரது சொந்த ஊரான கெடா அலோர் ஸ்டாருக்கு அனுப்பப்படும்.

விளையாட்டில் ஆர்வம் உள்ள நல்ல அதிகாரி என மாநிலப் போலீஸ் தலைவர் அயூப் யாக்கோப், அகமட் பக்தியாரை வருணித்தார். அவர் கடந்த ஆண்டு பினாங்கிற்கு மாற்றப்பட்டார்.

“அவரது மரணம் எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதுதான் இறைவன் சித்தம்,” என அயூப் பினாங்கு மருத்துவ மனையில் நிருபர்களிடம் கூறினார். தமக்கு அகமட் பக்தியாரை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும் என்றார் அவர்.

அகமட் பக்தியார் குடும்பத்துக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் “உண்மையான போலீஸ் அதிகாரி” என வருணித்த லிம் கடந்த மாதம் எஸ்பிளனேடில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றின் போது லினாஸ் ஆதரவு எதிர்ப்புக் குழுக்களுக்கு இடையில் மூண்ட பதற்றத்தைத் தணிப்பதற்கு உதவியதாகச் சொன்னார்.

“அவர் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க மிகவும் மரியாதைக்குரிய போலீஸ் அதிகாரி ஆவார். அவர் பினாங்கில் சேவை செய்த காலத்தில் தமது கடமைகளை விருப்பு வெறுப்பின்றி உறுதியாகவும் பொறுப்புடனும் நிறைவேற்றி வந்துள்ளதை நான் பார்த்துள்ளேன்,” என லிம் விடுத்த அறிக்கை கூறியது.

“நமது நாடு சிறந்த துணிச்சலான போலீஸ் அதிகாரி ஒருவரை உண்மையிலேயே இழந்து விட்டது. நான் எப்போதும் அவருடைய சேவைகளை நினைவில் வைத்திருப்பேன். பாராட்டுவேன்.”

அகமட் பக்தியார், “பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பு உணர்வும் மிக்க” போலீஸ் அதிகாரி என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமின் பினாங்குக் கிளை ஒருங்கிணைப்பாளர் லீ ஹுய் பெய் வருணித்தார்.

“அவர் தமது கடமைகளை உறுதியாக நிறைவேற்றினார். எடுத்துக்காட்டுக்கு பிப்ரவரி 26ம் தேதி நிகழ்ந்த ஹிம்புனான் ஹிஜாப் 2.0 பேரணி ஏற்பாடு செய்த பேரணிக்கு மூர்க்கத்தனம் கொண்ட கும்பல் இடையூறு செய்வதையும் பங்கேற்பாளர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதையும் அவர் தடுக்க முயன்றார்.”

“நாங்கள் தொழில் ரீதியில் இயங்கிய போலீஸ் அதிகாரி ஒருவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். மக்களுக்கு சேவையாற்றுவதில் மற்றவர்களுக்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு,” என்றும் லீ சொன்னார்.

அந்தப் பேரணியின் போது இரண்டு பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர். அது தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிக்க போலீசார் 29 சாட்சிகளை அழைத்துள்ளனர்.