டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்குமிடையிலான சச்சரவுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.
கட்சி ஆலோசகர்கள் லிம் கிட் சியாங்கும் சென் மான் ஹின்னும் நேற்றிரவு கர்பாலைச் சந்தித்ததாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் லிம் குறிப்பிட்டிருந்தார்.
“பிஎன் ஊடகங்களால் பெரிதுபடுத்திப் பேசப்பட்ட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது”, என பினாங்கு முதலமைச்சருமான லிம் கூறினார்.
இனி, உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் பொதுத்தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
இராமசாமி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று டிஏபி ஒழுங்கு வாரியம் செய்த முடிவை கர்பால் கண்டித்ததை அடுத்து லிம்மின் அறிக்கை வெளிவந்துள்ளது.
ஒழுங்கு வாரியத்தின் முடிவைச் “செல்லத்தக்கதல்ல” என்று கர்பால் கூறினார்.இராமசாமி அவ்வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவர் என்பதால் அவரை விசாரிக்கும் தகுதி அதற்கில்லை என்றாரவர்.
இந்த விவகாரம் மைய நீரோட்ட செய்தித்தாள்களில் பெரிதுபடுத்திப் பேசப்பட்டது.த ஸ்டார் அடுத்தடுத்து இரண்டு நாள்களுக்கு இவ்விவகாரம் பற்றிய செய்திகளை வெளியிட்டது.
இதன் தொடர்பில் எதுவும் கருத்துரைக்காமல் அமைதி காத்த லிம், திங்கள்கிழமை கர்பாலையும் மற்றவர்களையும் அழைத்துப் பேசினார்.
டிஏபியில் தேர்தல் வேட்பாளர்களை நியமனம் செய்வது கட்சியின் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் அந்த விசயத்தில் “வார்லோர்டுகள்” தலையிடக்கூடாது என்று கர்பால் அறிக்கை விட அதற்குப் பதில் அளிப்பதுபோல் இராமசாமி டிஏபி-க்கு “காட்பாதர்களும்” தேவையில்லை என்று கூறப்போக இருவருக்குமிடையில் சர்ச்சை மூண்டது.