மலேசியாவின் தேசியக் கடன் கடுமையான அல்லது கவலையளிக்கும் கட்டத்தை அடையவில்லை என நிதித் துணை அமைச்சர் அவாங் அடெக் கூறுகிறார். அரசமைப்பு ரீதியில் அரசாங்கம் கடன் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வரம்புக்கு இரண்டு விழுக்காடு குறைவாக தேசியக் கடன் அளவு உள்ளதாக அவர் சொன்னார்.
“அது இப்போதைக்குக் கடுமையான கட்டத்தில் இல்லை. மொத்த தேசிய உறபத்தியில் 55 விழுக்காடு என்பது நமது வரம்பாகும். நாம் இப்போது 53 விழுக்காடு என்ற நிலையில் இருக்கிறோம். ஆகவே நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை,” என அவர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
அதிகரித்து வரும் அரசாங்கக் கடனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என பிகேஆர் மாச்சாங் உறுப்பினர் சைபுதின் நசுத்தியோன் தொடுத்த கேள்விக்கு அவாங் அடெக் பதில் அளித்தார்.