“தேர்தலில் நேர்மை” உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் முதல் ஆள் சைபுடின்

அம்னோவின் தெமர்லோ எம்பி சைபுடின் அப்துல்லா, கடந்த சனிக்கிழமை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) அறிமுகப்படுத்திய தேர்தலில் நேர்மை உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் முதல் வேட்பாளராகிறார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் உயர்க்கல்வி துணை அமைச்சருமான சைபுடின், நாளை நாடாளுமன்ற இல்லத்தில் அந்த உறுதிமொழி ஆவணத்தில் கையொப்பமிடுவார்.

“நாங்கள் பாகுபாடு காட்டுவதாக யாரும் நினைத்துவிடக்கூடாது.அதனால்தான் இதைத் தொடங்குவதற்கு எந்த அரசியல்வாதியையும் அணுகவில்லை”, என்று டிஐ-எம் தலைவர் பால் லோ கூறினார்.

பொதுவாக அது பற்றி அறிவித்தார்கள்.

“இதற்கு முதலில் பதிலளித்தவர் சைபுடின்.ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் அழைத்த அவர் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளத் தயார் என்றார்”.

சைபுடின் முன்வந்திருப்பதைத் தொடர்ந்து மேலும் பல வேட்பாளர்கள் பண அரசியலை ஒழிக்கும் இந்த இயக்கத்தில் சேர்வார்கள் என அவர் எதிர்பார்க்கிறார்.

இந்த உறுதிமொழி ஒருவகை ‘சமுதாய ஒப்பந்தம்’ போன்றது.இதில், கையொப்பம் இடுவதன்வழி வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையின்போதும் தேர்தலுக்குப்பின் பதவியில் அமர்ந்த பின்னும் பண அரசியலில் ஈடுபடுவதில்லை, கையூட்டுப் பெறுவதில்லை என உறுதி எடுத்துக்கொள்கிறார்கள்.

இது, கையொப்பமிடுவோரை அதிகாரப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தமல்ல.அதே வேளை, ஒப்பந்தம்  கண்டிப்பாக பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க அதிகாரப்பூர்வமான அமைப்பும் இல்லை.

ஆனால், கையொப்பமிடுவோர் முகநூல் அல்லது டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுக்கென்று ஒரு இணையப்பக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.அதன்வழி வாக்காளர்கள் அவர்களுடன் நேரடி தொடர்புகொண்டிருப்பார்கள். அவர்களின் நடத்தை பற்றிய பின்னூட்டங்களையும் வழங்குவர்.

யாரெல்லாம் இதில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள் என்ற தகவலைத் தெரிவிக்க டிஐ-எம் ஒரு வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது.அதன் முகவரி timalaysia-electionpledge.org.my

“இது வெறும் காகிதம்தானே என்று சிலர் சொல்லலாம்.ஆனாலும் அதில் கையொப்பமிடுவதன்வழி அவர்கள் பொறுப்பாளிகள் ஆகிறார்கள்.மக்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்”, என்று லோ விளக்கினார்.

இந்த உறுதிமொழி வேட்பாளர்களுக்கென்று உருவாக்கப்பட்டது.அரசியல் கட்சிகளுக்காக உருவாக்கப்பட்டதல்ல.

சைபுடின் அம்னோவில் ஒரு சீர்திருத்தவாதியாகத் திகழ்கிறார்.

அவர் பல்கலைகழக மாணவர்களுக்கு அரசியல் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்கிறார், அரசியல் தலைவர்கள் பொதுவிவாதங்களில் ஈடுபடுவதை வரவேற்கிறார்.