அம்னோ தலைவர்களைக் கட்சியிலிருந்து விலகச் செய்யும் முயற்சியில் பாஸ்

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, அம்னோ தலைவர்களை அம்னோவிலிருந்து வெளியேறச் செய்யும் முயற்சியாக அவர்களில் பலருடன் “பேச்சு நடத்திவருவதாக”த் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான காடிர் ஷேக் ஃபாதிர் இவ்வாரத் தொடக்கத்தில் அக்கட்சியிலிருந்து விலகியதற்குத் தாமே காரணம் என்று கூறிய முகம்மட் சாபு இன்னும் பலர் விலகலாம் என்றும் கோடி காட்டினார்.

“காடிருடன் நீண்டகாலமாகவே மனம்விட்டுப் பேசி வந்திருக்கிறேன். அவர் அம்னோவிலிருந்து விலகிய பின்னர்தான் உங்களுக்குத் தெரியவந்துள்ளது. இப்போது மேலும் பலருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்…..சற்றுக் காத்திருங்கள்”, என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது.

மாட் சாபு கெடா, ஜித்ராவில் ஒரு கூட்டத்தில் இதைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.கெடா பாஸில்  ஏற்பட்டுள்ள சச்சரவின் காரணமாக அக்கூட்டத்துக்கு வந்திருந்தவர் “எண்ணிக்கை மிகக் குறைவு” என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியிருந்தது.

இவ்வாண்டு தொடக்கத்தில், சாபாவில் அம்னோ பிரமுகர் லாஜிம் யுகின் அம்னோவிலிருந்து விலகி பக்காத்தான் கட்சிகளில் ஒன்றில் சேர்வார் என்ற வதந்தி பலமாகவே இருந்தது.

அவருடன் மாநிலத் தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்ற பேச்சும் அடிபட்டது.