மாக்ஸிமுஸ் தடை உத்தரவு குறித்து பிஎஸ்சி உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்துகிறார்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு (பிஎஸ்சி) மட்டுமே உரித்தான தகவல்களை வெளியிடுவதில் ‘கவனமாக’ இருக்குமாறு அதன் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி குழு உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

“வெளிப்படையாக சொல்வது பற்றி நான் பிஎஸ்சி உறுப்பினர்களை எச்சரித்துள்ளேன்… நாங்கள் இன்னும் அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பல வாக்காளர்கள் ஒரே முகவரியில் இருப்பது பற்றியும் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றியும் நாங்கள் இன்னும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டியுள்ளது. பல சாத்தியங்கள் உள்ளன,” என அவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.

தேர்தல் ஆணைய புள்ளிவிவரக் களஞ்சியத்தில் காணப்படுகின்ற பல குளறுபடிகளை அம்பலப்படுத்தும் மலேசிய நுண்மின்னியல் முறையின் (மிமோஸ்) ஆவணங்களின் பிரதிகளை கடந்த செவ்வாய்க் கிழமையன்று  பிஎஸ்சி-யில் அங்கம் பெற்றுள்ள பிகேஆர் கோம்பாக் உறுப்பினர் அஸ்மின் அலியும் டிஏபி ராசா உறுப்பினர் அந்தோனி லோக்கும் பாஸ் கோலக் கிராய் உறுப்பினர் ஹட்டா ராம்லியும் விநியோகம் செய்தனர்.

குறைந்தது ஒரு  முகவரியில் 100 வாக்காளர்களுடன் 354 முகவரிகளில் மொத்தம் 79,098 வாக்காளர்கள் இருப்பதாக அவர்கள் கூறினர்.

“முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் சாலைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். (அது ஒரு காரணமாக இருக்கலாம்) சில முழுமையான முகவரிகளுடன் இல்லாமால் இருக்கின்றன. அவர்கள் தங்கள் முகவரிகளைப் புதுப்பிப்பது பற்றிக் கவலைப்படுவதே இல்லை,” என்றார் மாக்ஸிமுஸ்.

குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் எல்லா ஆவணங்களும் நாடாளுமன்றத்துக்கு இறுதி அறிக்கை சமர்பிக்கப்படும் வரையில் பொது மக்கள் பயனீட்டுக்கு அல்ல என நிரந்தர விதிகள் 85 கூறுவதை அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான அவர் சுட்டிக் காட்டினார்.