அமானா துணைத் தலைவர் காடிர் ஷேக் ஃபாதிர், தாம் அம்னோவிலிருந்து விலகியதற்குக் அக்கட்சிக்குச் சொந்தமான ஊடகங்களில் விடாமல் வந்துகொண்டிருந்த தாக்குதல்களும் மிரட்டல்களும்தான் காரணம் என்கிறார்.
அம்னோவின் நீண்டகால உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காடிர், “அதிகாரத்தில் உள்ளவர்களின் ஏற்பாட்டில்தான்” ஊடகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக் கூறினார்.
“அதனை அடுத்து அம்னோ தலைமைச் செயலாளர் (தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்), கட்சியிலிருந்து விலகுமாறு அறிக்கை விடுத்தார்.
“அதனால், 56ஆண்டுகளாக உயிராக மதித்து வந்த கட்சியிலிருந்து விலகினேன்”, என்றார் அந்த முன்னாள் தகவல் அமைச்சர்.
பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை நிறுத்த வேண்டும்; கட்சிக்குப் பரப்புரை செய்வதில் அரசுத்துறைகளைப் பயன்படுத்தக்கூடாது; ஊடகங்கள் சுயேச்சையாகவும் நியாயமாகவும் செயல்பட வேண்டும் என்றெல்லாம் தாம் கருத்துத் தெரிவித்ததை மைய நீரோட்ட ஊடகங்கள் திரித்துக் கூறின என்று காடிர் சொன்னார்.
அவை ஒன்றும் புதிய விவகாரங்கள் அல்ல என்றும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்டும் பிரதமர் நஜிப் ரசாக்கும்கூட அவை பற்றி அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
12-வது பொதுத் தேர்தலில், கெடா கூலிம் பண்டார் பாருவில் பிஎன் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாக காடிர் கூறியது குறித்து ஒழுங்குக் குழு விசாரிக்க முனந்ததை அடுத்து மார்ச் 19-இல் அவர் கட்சியிலிருந்து விலகினார்.
‘அம்னோ கொள்கையைவிட்டு விலகிச் சென்றுவிட்டது’
எந்த நோக்கத்துடன் அம்னோ நிறுவப்பட்டதோ அந்த நோக்கத்துக்காக தொடர்ந்து போராடப் போவதாக காடிர் கூறினார்.
ஆளும் கட்சி “அம்னோ நிறுவுனர்களின் உண்மையான நோக்கங்களை விட்டு விலகிச் சென்றுவிட்டது” என்றாரவர்.
அந்நோக்கங்களில், பேச்சுரிமை, அரசியல் கட்சிகள் அமைக்கும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை முதலிய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டிருந்தன.
“நிறுவுனர்களின் நோக்கங்களுக்கு அரசமைப்பே சான்று பகரும்”.
மாற்றுக்கட்சியிடமிருந்து அழைப்பு வந்ததா என்று வினவியதற்கு அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்தார்.
ஆனால், பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் அழைப்பு விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
“அவர்கள் அழைக்கிறார்கள் என்பதற்காக போக மாட்டேன். நானே சொந்தமாக முடிவு செய்வேன்”, என்றார்.