உத்துசான் மலேசியா பத்திரிக்கையில் மார்ச் மாதம் 20ம் தேதி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் ( MUIP ) தலைவர் செனட்டர் எஸ் நல்லகருப்பனுடைய அறிக்கையில் உள்ள இழிவுபடுத்தும் கருத்துக்கள் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், நல்லகருப்பனுக்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மெஸர்ஸ் டைம் அண்ட காமினி என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றப் பதிவகத்தில் அந்த வழக்கு இன்று சமர்பிக்கப்பட்டது.
அந்த வழக்கில் அன்வார், நல்லகருப்பனை முதலாவது பிரதிவாதியாகவும் உத்துசான் மிலாயு (மலேசியா) பெர்ஹாட்டை இரண்டாவது பிரதிவாதியாகவும் அந்தப் பத்திரிக்கையின் குழுமத் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக்கை மூன்றாவது பிரதிநிதியாகவும் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பத்திரிக்கையின் கட்டுரையில் காணப்படும் அவதூறான வார்த்தைகள் பொய்யானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் தீய நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அன்வார் அதில் கூறிக் கொண்டுள்ளார்.
எதிர்த்தரப்புத் தலைவர், அரசியல்வாதி என்ற முறையில் தமது தோற்றத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தவும் மாசு கற்பிக்கவும் வேண்டுமென்றே அந்தக் குற்றச்சாட்டுக்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அந்த அவதூறான வார்த்தைகளை மீட்டுக் கொள்ளுமாறு எல்லாப் பிரதிவாதிகளுக்கும் தமது வழக்குரைஞர்கள் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பியதாகவும் ஆனால் அவர்கள் அதனைச் செய்யத் தவறி விட்டதாகவும் அன்வார் கூறிக் கொண்டார்.
பொதுவான சேதங்களுக்கும் தூண்டப்பட்ட சேதங்களுக்கும் குறிப்பான சேதங்களுக்கும் மற்ற செலவுகளுக்கும் நீதிமன்றம் பொருத்தமானது எனக் கருதும் மற்ற நிவாரணங்களுக்கும் அன்வார் 100 மில்லியன் ரிங்கிட் கோரினார்.
அந்த அவதூறான வார்த்தைகளை பிரதிவாதிகளும் அவர்களது பிரதிநிதிகளும் தொடர்ந்து வெளியிடுவதற்கும் கூறுவதற்கும் தடை உத்தரவு வழங்குமாறும் அவர் தமது விண்ணப்பத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.