தனியார்துறை பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு உயர்த்தும் உத்தேச சட்டமுன்வரைவு இவ்வாண்டில் சட்டம் ஆகுமெனத் தெரியவில்லை என்கிறார் மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம்.
அச்சட்ட முன்வரைவைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அலசி ஆராய வேண்டியிருப்பதாக அமைச்சர் கூறினார்.
“(அது)நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படமாட்டாது.அடுத்தக் கூட்டத்தில்தான் கொண்டுவரப்படும்”, என்று ஆங்கில மொழிச் செய்தித்தாளான த ஸ்டார், சுப்ரமணியத்தை மேற்கோள்காட்டியுள்ளது.
அந்த வகையில் இவ்வாண்டு பணி ஓய்வு பெறுவோர் நன்மை அடைய மாட்டார்கள் ஆனால், 2013-இல் பணிஓய்வு பெறுவோரின் பணிக்காலம் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றாரவர்.
பணிஓய்வு வயதை நீட்டிப்பதற்கு மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.ஆனால், மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் அதை வரவேற்றது.அதனால் நாடு முழுவதும் 6மில்லியன் ஊழியர்கள் பயனடைவர் என்று அது கூறியது.