ஹசான்: இரண்டு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் என்னை விட அதிகமாக செலவு செய்தார்கள்

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி, தமது இரண்டு முன்னாள் சகாக்களான- டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் ஹலிமா அலியும்- தம்முடன் ஒப்பிடுகையில் தங்களது அலுவலகங்களை புதுப்பிப்பதற்குக் கணிசமான அளவு கூடுதலாகச் செலவு செய்துள்ளதாக கூறிக் கொண்டுள்ளார்.

“சிலாங்கூர் அரசாங்கம் என் செலவுகளையும் அதே நேரத்தில் உள்ள மற்ற அரசாங்கத் துறைகள் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்,” என அவர் இன்று பிற்பகல் கோலாலம்பூரில் தமது இல்லத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“எனக்குக் கிடைத்த தகவலின்படி என் செலவுகள் சேவியர், ஹலிமா ஆகியோருடைய செலவுகளைக் காட்டிலும் குறைவாகும்.”

தமது அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்கு ஹசான் 300,000 ரிங்கிட் செலவு செய்து பணத்தை விரயமாக்கியதாக புக்கிட் அந்தாராபாங்சா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி கூறியதற்கு ஹசான் பதில் அளித்தார்.

என்றாலும் தமது செலவுகள் நியாயமானது என்று வலியுறுத்திய ஹசான், வேலை தரமாகவும் ‘மிதமாகவும்’ இருந்ததாக தெரிவித்தார்.

“அந்த அலுவலகத்தில் சிறிய கடனுதவித் திட்டத்தைச் சேர்ந்த 19 ஊழியர்களும் இருந்தனர். ஆகவே ஒரே நபருக்கு மட்டுமான மந்திரி புசார் அலுவலகத்துடன் அதனை ஒப்புநோக்குவது நியாயமல்ல,” என்றார் அவர்.