தங்கள் ஓய்வுக்காலத்தை வெளிநாடுகளில் கழிக்க எண்ணும் அமெரிக்கர்கள் விரும்பிச் செல்லும் 18 இடங்களின் பட்டியலில் மலேசியாவும் ஒன்றாகும்.மூத்த குடிமக்கள் அடக்கமாக செலவுசெய்து வாழ முடியும் என்கிற நிலையும் வாழ்க்கைத் தரமும் அப்பட்டியலில் இடம்பெறும் தகுதியை மலேசியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளன.
இந்த 18-நாடுகளின் பட்டியலைத் தொகுத்திருப்பவர் கெத்லின் பெட்டிகோர்ட்-லிஃப் அண்ட் இன்வெஸ்ட் ஓவர்சீஸ் வெளியீட்டுக் குழுமத்தின் நிறுவுனர்.
பெட்டிகோர்ட், கடந்த 25ஆண்டுகளாக வெளிநாடுகளில் வாழ்வதற்கும் ஓய்வுக்காலத்தைக் கழிப்பதற்கும் முதலீடு செய்வதற்குமான வாய்ப்புகள் பற்றி நிறைய எழுதி வந்திருப்பவர். அவரது செய்திமடல்கள் இணையத்தளத்தில் காணக் கிடக்கின்றன.
அண்மையில் அவர் எழுதிய ‘How To Retire Overseas – Everything You Need to Know to Live Well Abroad for Less’ நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பெட்டிகோர்டின் பட்டியலில் மலேசியாவைத் தவிர்த்து வேறு இரு ஆசியான் நாடுகளும் இடம்பெற்றுள்ளன. ஒன்று தாய்லாந்து(16வது), மற்றது வியட்நாம் (17வது).
கோலாலம்பூர் பல்வகை வேறுபாடுகளைக் கொண்ட ஒரு நகரம் என்று பெட்டிகோர் வருணித்துள்ளார்.
பளிச்சிட்டு ஒளிறும் பெட்ரோனாஸ் கோபுரங்கள், மாநகருக்குத் தனித்துவம் வாய்ந்த அழகிய தோற்றத்தைத் தருகின்றன. இங்குள்ள குளிர்சாதன வசதியுடன்கூடிய நவீன பேரங்காடிகளில் கைவினை பத்தேக் துணிகளையும் ரோலெக்ஸ் கடிகாரங்கள், டிப்பனி நகைகள் என வாங்கலாம்.
“இந்த அதிநவீன கட்டிடங்களுக்கு அருகிலேயே பழங்கால மலாய் கிராமமான கம்போங் பாரு இன்னமும் உள்ளது.இங்கு கோழிகள் கட்டுப்பாடின்றி உலவுவதைப் பார்க்கலாம்.கிராமங்களில் காணப்படும் அமைதியான சூழலை அங்கும் பார்க்கலாம்.
“மாநகர் மத்தியிலிருந்து 20நிமிடம் நடந்து சென்றால் நகருக்குள்ளேயே ஒரு காடு.அதில் குரங்குகளுடன் கொஞ்சிக் குலாவலாம்.
“30நிமிடம் நடந்தால் சைனாடவுன் வரும்.பக்கத்திலேயே குட்டி இந்தியா. அங்கு வியாபாரிகள் பல்வேறு பண்டங்களையும் உணவுப் பொருள்களையும் விற்பனை செய்வதைப் பார்க்கலாம். கலாச்சாரத்தைப் பார்க்கலாம்.மாநகரின் பன்முகத்தன்மை பளிச்சிடுவதையும் பார்க்கலாம்.
ஆசியாவின் வேறு சில இடங்களைப் போல் அல்லாமல் கோலாலம்பூர் உண்மையிலேயே வெளிநாட்டவரை வருக வருகவென்று வரவேற்கிறது.மொழி இங்கு ஒரு பிரச்னை இல்லை.எல்லாருமே போதுமான அளவுக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். குடிநுழைவுப் பிரச்னையும் கிடையாது.சாதாரண சுற்றுலா விசாவைக் கொண்டு கூடுதல் காலம் தங்க முடியும்”.
மலேசியா அதன் “மலேசியா இரண்டாவது வீடு” என்னும் திட்டத்தை வெளிநாடுகளில் இன்னும் தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று பெட்டிகோர்ட் கூறுகிறார்.
அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து வருவதால் அந்திம காலத்தை வெளிநாடுகளில் கழிக்க விரும்புகிறார்கள்.