சீன மொழிக் கல்வி மீது காஜாங்கில் நிகழ்ந்த பேரணியில் தாம் கிட்டத்தட்ட “குத்தப்பட்டதாக” கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கூறிய போதிலும் யாரும் தாக்கப்படவில்லை என சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சாவும் பேரணி ஏற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
அந்தப் பேரணியின் போது நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரர்கள் வீ அந்த நிகழ்வின் போது தாக்கப்படவில்லை எனத் தம்மிடம் சொன்னதாக துன் ஹிஸான் தெரிவித்தார்.
அந்தத் தகவல்களை இன்று பல சீன மொழி நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
“இல்லை, அவர் தாக்கப்படவில்லை…” என அவர் சொன்னதாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போலீசில் புகார் செய்யப்படவில்லை என்பதால் போலீசார் அதனை விசாரிக்க மாட்டார்கள் என்றும் துன் ஹிஸான் கூறினார்.
சீனப் பள்ளிக்கூடங்களில் சீன மொழியில் கல்வி கற்ற ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை ஆட்சேபிக்கும் வகையில் சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் காஜாங் நியூ எரா கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த அந்தப் பேரணிக்கு வீ திடீரென வருகை புரிந்தார். அவர் அங்கு சென்ற பின்னர் குழப்பம் ஏற்பட்டது.
பேரணியிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தம்மை டி சட்டை அணிந்திருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் குத்த முயன்றதாக கூறிக் கொண்டார்.
அவருக்கு காவலாகச் சென்ற போலீஸ்காரர்கள் அந்த நபரைத் தடுக்க முயன்ற போதிலும் அவர் குத்தியது வீ-யின் கன்னத்தைத் தொட்டு விட்டது.
இதனிடையே ஏற்பாட்டாளர்கள் பேரணி ஒளிப்பதிவுகளை போட்டுப் பார்த்த போது அத்தகைய தாக்குதல்கள் ஏதும் நிகழவில்லை என்பதை கண்டு பிடித்ததாக டோங் ஜோங் துணைத் தலைவர் சௌ சியூ ஹொங், சின் சியூ நாளேட்டிடம் கூறினார்.
டோங் ஜோங்-கின் உள் வீடியோ குழுவுடன் வெளி வீடியோ பதிவுக் குழு ஒன்றுக்கும் பேரணியைப் பதிவு செய்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த இரு குழுக்களும் வீ அங்கு வந்து சேர்ந்ததும் அவர் மீது சிறப்புக் கவனம் செலுத்தின என்றார் அவர்.
“நாங்கள் அதனை கணினியில் போட்டுப் பார்த்தோம். அந்த நேரத்தில் பலர் தங்களது கைத் தொலைபேசியில் நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். வீ தாக்கப்பட்டிருந்தால் அந்தக் காட்சி இன்னேரம் பரவலாக விநியோகம் செய்யப்பட்டிருக்கும்,” என்றும் சௌ சொன்னாதாக சின் சியூ தெரிவித்தது.
அத்துடன் அவர் வீ கூறியது பற்றியும் ஐயம் கொண்டுள்ளார். காரணம் தம்மையும் டோங் ஜோங் தலைவர் யாப் சின் தியானையும் மேடையில் சந்தித்த வீ, புகார் செய்யவில்லை என்றார் அவர்.
அந்தப் பேரணியின் தலைமை ஏற்பாட்டாளர் சௌ ஆவார்.
“அவர் உண்மையில் தாக்கப்பட்டிருந்தால் ஏதும் நடக்காதது போல் அவர் எப்படிப் பேரணியில் பங்கு கொண்டிருக்க முடியும் ?”
பேரணிக்குப் பின்னரே அவர் நிருபர்களைச் சந்தித்து தாம் தாக்கப்பட்டதாக கூறியது வினோதமாக இருக்கிறது என்றும் சௌ சொன்னார்.
சாதாரண உடையில் இருந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 போலீஸ்காரர்களுடனும் 60க்கும் மேற்பட்ட ரேலா உறுப்பினர்களுடனும் பேரணிக்கு வந்த வீ தாக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் அவர் கருதுகிறார்.