கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காஜாங்கில் நடைபெற்ற பேரணி ஒன்றின் போது கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கிட்டத்தட்ட குத்தப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கும் செய்திகள் வெளி வந்த போதிலும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என அவர் பிடிவாதமாகக் கூறுகிறார்.
“நீங்கள் எப்படித் தாக்குதலை வரையறுப்பீர்கள் ? சிராய்ப்பு அல்லது ரத்தக் கசிவு இருந்தால் மட்டும் தானா ? நான் காயமடையவில்லை. மடக்கப்பட்ட கை ஒன்று என்னை நோக்கி வந்ததை நான் பார்த்தேன். நான் நகர்ந்து விட்டேன். அதனால் என் மீது தொட்டதை நான் உணர்ந்தேன்,” என வீ நிருபர்களிடம் கூறினார்.
பேரணியின் போது தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா சொன்னதாக பல சீன மொழி நாளேடுகள் வெளியிட்டுள்ள செய்திகள் பற்றி வீ கருத்துரைத்தார்.
“சிலாங்கூர் தலைமைப் போலீஸ் அதிகாரியின் கருத்துக்கள் என்னை குழப்பமடையச் செய்துள்ளன. நான் போலீஸில் புகார் செய்யவில்லை. ஆகவே போலீசார் அந்த விவகாரம் மீது எப்படி முடிவுக்கு வர முடியும்?” என அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
சீனப் பள்ளிக்கூடங்களில் சீன மொழியில் கல்வி கற்ற ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை ஆட்சேபிக்கும் வகையில் சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் காஜாங் நியூ எரா கல்லூரியில் ஏற்பாடு செய்த அந்தப் பேரணிக்கு வீ திடீரென வருகை புரிந்தார். அவர் அங்கு சென்ற பின்னர் குழப்பம் ஏற்பட்டது.
பேரணியிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தம்மை டி சட்டை அணிந்திருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் குத்த முயன்றதாக கூறிக் கொண்டார்.
போலீசாரும் ஏற்பாட்டாளர்களும் வீ தாக்கப்படவில்லை என்கின்றனர்.