ஜிஎஸ்டி “பொதுத் தேர்தலுக்குப் பின்னரே” சாத்தியம்

ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியை அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு பின்னரே அமலாக்க முடியும் என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார்.

அதே வேளையில் அந்தக் கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய பிஎன்-னுடன் ஒத்துழைக்குமாறு  பக்காத்தான் ராக்யாட்டைக் கேட்டுக் கொண்டார்.

“ஜிஎஸ்டி பெரும்பாலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமலாக்கப்படும் என நான் நம்புகிறேன். நாட்டுக்கு மிக முக்கியமானது எனக் கருதப்படும் விஷயங்கள் என வரும் போது பிஎன் -னும் பக்காத்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என நான் கருதுகிறேன்,” என்றார் அவர்.

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய அந்தக் கொள்கையை அமலாக்குமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த போது இட்ரிஸ் அவ்வாறு சொன்னார்.

மலேசிய சான்றிதழ் பெற்ற பொதுக் கணக்காயர் கழகத்தின் (Malaysian Institute of Certified Public Accountants) உறுப்பினர்களுடன் நண்பகல் விருந்தில் அவர் இன்று கலந்து கொண்டார்.

13வது பொதுத் தேர்தல் பெரும்பாலும் மே அல்லது ஜுன் மாதத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இந்த ஆண்டுக்கு முன்னதாக ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படும் என இட்ரிஸ் எண்ணவில்லை.

“நீங்கள் பிரதமரை கேட்க வேண்டும். அவர்தான் நிதி அமைச்சர். ஆனால் அது இப்போது நடக்கும் என நான் எண்ணவில்லை. நான் ஏற்கனவே கூறியுள்ளது போல அதனை அமல் செய்ய நீண்ட காலம் பிடிக்கும்- அது அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒர் ஆண்டு பிடிக்கும்.”

“என்றாலும் நம்மைப் போன்ற நாடுகள் அதனைச் செய்வதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால்தான் 143 நாடுகள் ஏற்கனவே ஜிஎஸ்டி-யை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளன.”

வரி வசூலிப்பு அடித்தளத்தை  விரிவுபடுத்துவது

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜிஎஸ்டி அமலாக்கப்பட மாட்டாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இப்போது எல்லாத் தரப்புக்களும் 13வது பொதுத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை ஆரூடமாகக் கூறிக் கொண்டு வருகின்றன.

ஜிஎஸ்டி-யை அமலாக்கும் போது மலேசியா எதிர்நோக்கக் கூடிய தடைகள் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த இட்ரிஸ், பொது மக்கள் அந்த யோசனைக்கு எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர்  எனத் தாம் நம்புவதாகச் சொன்னார்.

“ஜிஎஸ்டி பணவீக்கம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என பலர் நம்புகின்றனர். அடிப்படையான உணவுப் பொருட்களின் விலைகளையும் ஜிஎஸ்டி பாதிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.”

“என்றாலும் ஜிஎஸ்டி-யை அமலாக்கியுள்ள பல நாடுகள் அரிசி போன்ற அடிப்படைப் பொருட்களை ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கியுள்ளன.”

“ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு அதனைப் பற்றிய விளக்கம் முக்கியம் என நான் எண்ணுகிறேன்,” என இட்ரிஸ் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி மலேசியாவின் வரி வசூலிப்பு அடித்தளத்தை விரிவுபடுத்தும் என வலியுறுத்திய அவர், தற்போது நாட்டில் 17 மில்லியன் மக்கள் மட்டுமே வரி செலுத்துவதாகச் சொன்னார். ஜிஎஸ்டி வழி நிறுவன வரியையும் தனி நபர் வருமான வரியையும் குறைக்க முடியும் எனக் குறிப்பிட்ட இட்ரிஸ் அதனால் நமது பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் போட்டி ஆற்றல் அதிகரிக்கும் என்றார்.