சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் மரண தண்டனை குறித்த விவகாரத்தில் அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவதாகவும் அதனால் அந்த விவகாரம் மீதான அந்த அமைப்பின் முயற்சிகளுக்குக் குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமைப் போராட்ட அரசு சாரா அமைப்பான சுவாராம் குற்றம் சாட்டியுள்ளது.
மரண தண்டனையை அகற்றுவதற்கு பெரும்பான்மை மக்களுடைய ஆதரவு இருந்தால் தாம் அதனை ஆதரிப்பதாக இந்த மாதத் தொடக்கத்தில் நஸ்ரி மாணவர்களிடம் ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
நேற்று வெளியான செய்தி ஒன்று, தடுப்பு சக்தியாக திகழ்வதற்கு மரண தண்டனை மலேசியாவுக்கு இன்னும் தேவைப்படுகிறது என நஸ்ரி கூறியதாகத் தெரிவித்துள்ளது. எனவே அமைச்சர் தாம் ஏற்கனவே சொன்ன வார்த்தைகளை மீறி விட்டாரா என சுவாராம் வினவியது.
அரசாங்க நிலையில் முரண்பாடு வெளிப்படையாகத் தெரிவதால் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்று வாழ்வு உரிமையை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்றும் மரண தண்டனையற்ற உலகிற்கு அணுக்கமாகச் செல்ல வேண்டும் என்றும் சுவாராம் இயக்குநர் நளினி ஏழுமலை கேட்டுக் கொண்டார்.
“மரண தண்டனை, மனித உரிமை மறுப்புக்களின் உச்சமாகும். அது மனிதன் ஒருவனை அரசாங்கம் அப்பட்டமாக கொல்வதாகும்.”
“அந்தக் கொடுமையான, மனித நேயமற்ற. அவமானத்தைத் தரும் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டால் திருத்தப்படவே முடியாது. அது அப்பாவி மக்கள் மீதும் விதிக்கப்படக் கூடும். மற்ற தண்டனைகளைக் காட்டிலும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பேருதவியாக இருக்கிறது என்பது ஒரு போதும் காட்டப்படவில்லை,” என்றும் நளினி சொன்னார்.
உலகம் முழுவதும் உள்ள (141) நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ரத்துச் செய்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர், கடைசியாக ஜனவரி மாதம் அந்தப் பட்டியலில் மாங்கோலியா இணைந்துள்ளதாகச் சொன்னார்.