‘கிறிஸ்துவ மருட்டல்’ என்னும் வார்த்தைகளை நீக்குவது மட்டும் போதாது’

ஜோகூர் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு ஒன்றின் தலைப்பிலிருந்து ‘கிறிஸ்துவமய மருட்டல்’ என்னும் சொற்களை நீக்கப்பட்டுள்ளது, தவறுகளைத் திருத்துவதற்கு போதுமானது அல்ல என மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் கூறுகிறது.

“அந்தக் கருத்தரங்கிற்கான கருப்பொருளுக்கு சேர்க்கப்பட்ட சொற்கள் எங்களைக் காயப்படுத்தியுள்ளன.”

“அந்தக் கருத்தரங்கிற்கான தலைப்பை திருத்துவதற்கு இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்தக் கருத்தரங்கின் நோக்கம் அனைவரும் அறிந்து கொள்ளும் அளவுக்கு அம்பலப்படுத்தப்பட்டு விட்டது,” என அந்த சம்மேளனத் தலைவர் ஆயர் இங் மூன் ஹிங்  விடுத்த அறிக்கை கூறியது.

இதனிடையே ஜோகூர் பாருவில் ஜோகூர் முப்தி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் மாநில கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ள அந்தக் கருத்தரங்கின் தலைப்பிலிருந்து சர்ச்சைக்குரிய ‘கிறிஸ்துவ மருட்டல்’ என்னும் இரண்டு சொற்களையும் நீக்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

புதிய தலைப்பு “Liberalisme, Pluralisme dan Gejala Murtad: Apa Peranan Guru Di Dalam Mepertahankan Akidah” (தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் மதம் மாற்றமும்: சமயத்தை பாதுகாப்பதில் ஆசிரியர் பங்கு என்ன ?)  என்பதாகும்.

அந்தத் தகவலை ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் மௌலிசான் பூஜாங் வெளியிட்டார்.

“Pemantapan Aqidah, Bahaya Liberalisme dan Pluralism Serta Ancaman Kristianisasi Terhadap Umat Islam. Apa Peranan Guru?” (“சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது, தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் கொண்டுள்ள அபாயங்கள், முஸ்லிம்களை கிறிஸ்துவ மயமாக்கும் மருட்டல். ஆசிரியர்களுடைய பங்கு என்ன ?” என்பது அந்தக் கருத்தரங்கின் பழைய தலைப்பாகும்.

கிறிஸ்துவ அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து கிறிஸ்துவ மய மருட்டல் என்ற சொற்கள் அகற்றப்பட்ட போதிலும் அது போதுமானது அல்ல என இங் சொன்னார். காரணம் கருத்தரங்கு நிகழ்வுக்கான உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றார் அவர்.

அந்த விவகாரம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்து வருகின்ற உலகளாவிய மிதவாதிகள் இயக்கத்துக்கும் கடந்த மாதம் உலக சமயங்களுக்கு இடையிலான வாரத்தைத்  தொடக்கி வைத்துத் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் ஆற்றிய உரைக்கும் முரணாக அமைந்துள்ளது  என்றும் மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத் தலைவர் சொன்னார்.