நல்லாவின் பிரதிவாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பிக்கிறார்

செனட்டர் எஸ் நல்லகருப்பனுக்கு எதிராக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 2009ம் ஆண்டு சமர்பித்த அவதூறு வழக்கில் நல்லகருப்பன் தாக்கல் செய்த பிரதிவாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பம் செய்துள்ளார்.

அன்வார் நேற்று அந்த விண்ணப்பதைச் சமர்பித்தார். அன்வார் நிதி அமைச்சராக இருந்த போது மாக்னம் கார்ப்பரேஷனிடமிருந்து 60 மில்லியன் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றார் என நல்லகருப்பன் கூறிக் கொண்டதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு அந்த வழக்கு தொடரப்பட்டது.

நல்லகருப்பன் தமது பிரதிவாத வாக்குமூலத்தில் மேலும் விவரங்களை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் உயர் நீதிமன்ற ஆணையை 2009ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்வார் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற ஆணையை தள்ளுபடி செய்யுமாறு முறையீட்டு நீதிமன்றத்துக்கு நல்ல கருப்பன் விண்ணப்பம் செய்து கொண்டார். ஆனால் அவரது விண்ணப்பம் கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி நிராகரிக்கப்பட்டதுடன் அன்வாருக்குச் செலவுத் தொகையாக 15,000 ரிங்கிட் கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

நல்ல கருப்பனுடைய பிரதிவாதத்தைத் தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பித்துக் கொண்டதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழக்கு மே 17ம் தேதிய வழக்கு நிர்வாகத்துக்கான தேதி என நிர்ணயம் செய்தது.

தகவல் தெரிவிக்கப்படாத காரணங்களுக்காக 1998ம் ஆண்டு தாம் சூதாட்ட நிறுவனம் ஒன்றின் 60 மில்லியன் ரிங்கிட்டை அன்வாரிடம் நேரடியாகக் கொடுத்ததாக 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பெர்மாத்தாங் பாவ்-வில் நிகழ்ந்த செராமா ஒன்றில் நல்ல கருப்பன் கூறியிருந்தார்.

அன்வார் நிதி அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த போது பல சூதாட்ட அனுமதிகளையும் நான்கு இலக்க லாட்டரி கடைகளுக்கும் அங்கீகாரத்தையும் வழங்கியதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

அவரது கூற்றுக்கள் தாம் ஊழலானவர், உண்மையற்றவர் என்ற தோற்றத்தை தமக்குத் தரும் நோக்கத்தைக் கொண்டிருந்ததாக 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நல்ல கருப்பனுக்கு எதிராக சமர்பித்த வழக்கில் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

நல்ல கருப்பன் தமது பிரதிவாதத்தின் விவரங்களைத் தரத் தவறியிருப்பது அன்வாருக்கு எதிராக அவர் அவதூறான குற்றச்சாட்டுக்களை வெளியிடுகின்றவர் என்பதைக் காட்டுவதாக பிகேஆர் சட்டப் பிரிவு இயக்குநர் லத்தீப்பா கோயா ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்த்தரப்புத் தலைவர், அரசியல்வாதி என்ற முறையில் தமது தோற்றத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதற்காக நல்ல கருப்பன் மீது அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீதும் அன்வார் இந்த வாரத் தொடக்கத்தில் 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.