கடைசி இந்தியர் பிரச்னை தீரும் வரை போராட்டம் தொடரும்

[எம்.கே. வள்ளுவன் – 06.09.2011, மலேசிய நண்பன்]

மலேசியாவில் பிறந்து பிறப்புப் பத்திரம் அடையாள அட்டை, குடியுரிமை போன்றவற்றை எடுக்க முடியாத இந்தியர்களின் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடைசி இந்தியர்களின் பிரச்னை தீரும் வரையில் தங்களது பணி தொடரும் என குறிப்பிட்ட அவர், வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி ஜொகூர், கெடா, சிலாங்கூர், பேரா ஆகிய மாநிலங்களில் வாழும் பிரச்னைகளுக்குரிய மலேசிய இந்தியர்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் மற்றொரு பதிவ நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மலேசியாவில் பிறந்த இந்தியர்கள் குடியுரிமை பெற்றவர்களாக திகழ எல்லா தகுதிகளும் உள்ளன. ஆனால் தேசிய பதிவு இலாகா கேட்கும் குறைந்த பட்ச ஆவணங்களைக் கூட அவர்களால் தயார் செய்ய முடியாததால் பலரால் குடியுரிமை உட்பட இதர பத்திரங்களையும் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

இப்படிப் பட்டவர்களுக்கு சட்டம் வழி தீர்வு காண முடியாமல் போகுமானால் இரு மஇகா அமைச்சர்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டத்தோ என். சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்கள் எல்லோரும் பதிந்து கொண்டு விட்டனர் ஆனால் உள்நாட்டில் பிறந்த பலர் இன்னும் தங்களை பதியாதிருப்பது தங்களை கவலை கொள்ள செய்துள்ளதாக தெரிவித்த அவர், அடுத்து வரக்கூடிய வாய்ப்பை இவர்கள் நழுவ விட்டு விடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.