அறிவியல் கணிதத்தை ஆங்கிலத்தில் போதிக்க தலைமையாசிரியர் வேண்டுகோள்

இன்று (08.04.2012) மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாநாட்டில் கருத்து தெரிவித்த கின்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் ஆங்கில மொழிக்கே செல்லவேண்டும் என்றார்.

தனது கணிப்பில் சுமார் 90 சதவிகிதப் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் இந்தப் பாடங்கள் போதிக்கப்படுவதையே விரும்புவதாகவும்; அப்படி செய்தால்தான் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகமாகும் என்றார்.

2003-ஆம் ஆண்டு துன் மகாதீரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழி மாற்றம் கடந்த ஆண்டு மீட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மொழிமாற்றம் ஏற்புடையதல்ல என்றும், அறிவியல் கணித பாடங்கள் புரிந்து கொண்டு கற்க வேண்டியவை, அதை ஆங்கிலத்தில் போதித்தால் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் அவற்றை சுலபமாக புரிந்து கொள்ள இயலாது. அதனால் அவர்கள் இப்பாடங்களில் பின் தங்குவர் என கருத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்த மொழி மாற்றம் தமிழப்பள்ளியின் சாயலை இழந்துவிடுவதோடு; நாளடைவில் தமிழ்மொழியை தவிர மற்ற பாடங்களை கற்பிக்க பிற இன ஆசிரியர்கள் படையெடுப்பர் என்ற நிலையும் இருந்தது.

“போராடி பெற்ற ஒரு நிலையை, தாரை வார்த்துக்கொடுக்க முற்படும் இதுபோன்ற நபர்கள், சிந்தித்து கவனமாக கருதுரைக்க வேண்டும்” என்றார் அந்நிகழ்வில் கலந்துகொண்ட சுப்பிரமணியம்.

“ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அதை கற்க அறிவியல், கணிதத்தைப் பயன்படுத்தக் கூடாது. பின்லண்ட் (Finland) நாட்டில் ஆங்கிலம் இராண்டாம் மொழியாக கற்பிக்கப்படுகிறது. அவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்” என்றார் சைல்டு நிறுவனத்தின் செயல்திட்டத் தலைவர் மருத்துவர் என். ஐங்கரன்.

“இது போன்ற கருத்துகளை மேலும் ஆழமாக விவாதித்து, மனோகரன் போன்றவர்களின் மாயயை உடைக்கவேண்டும்” என்ற செர்டாங்-கைச் சேர்ந்த சிவா என்பவர், “அது போன்ற தலைமையாசிரியர் தமிழப்பள்ளிக்கு தேவையில்லை, வேண்டுமானால் ஆங்கிலப்பள்ளிக்கு அல்லது மலாய்ப் பள்ளிக்கு போகட்டும்” என்றார்.

“நமது தாய்மொழியில் அறிவியலையும் கணிதத்தையும் ஆரம்பக் கல்வியில் கற்க இயலாது அல்லது அது தரங்குறைவாக இருக்கும் என வாதிடும் நபர்கள் சீனர்களை உதாரணமாக கொள்ள வேண்டும். நாமே தமிழுக்கு தரம் இல்லை எனறால் பிறகு யார் வந்து தமிழ்ப்பள்ளியில் பயில்வர்” என்ற சிவா அந்த தலையாசிரியரின் கருத்து வருந்தத்தக்கது என்றார்.