அல்தான்துயாவின் தந்தை கோலாலம்பூர் வருகிறார்

ஆறு ஆண்டுகளுக்கு  முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்ட மங்கோலிய மொழி பெயர்ப்பாளர் அல்தான்துயாவின் தந்தை செத்தேவ் ஷாரிபு இன்று மலேசியாவுக்கு வருகிறார்.

தமது வழக்குரைஞரையும் மனித உரிமைப் போராட்ட அமைப்பையும் சந்திப்பது அவரது மூன்று நாள் மலேசியப் பயணத்தின் நோக்கமாகும்.

அந்த விவரங்களை மங்கோலியத் தலைநகர் உலான் பாத்தாரில் உள்ள செத்தேவ்-வின் வழக்குரைஞர் Munkhsaruul Mijiddorj வெளியிட்டார்.

மங்கோலியப் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றும் செத்தேவ் கோலாலம்பூருக்கு வருவதற்கு முன்பு சிங்கப்பூரில் இரண்டு நாட்களுக்குத் தங்கியிருந்தார்.

“அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமற்றது. தாம் தொடுத்துள்ள சிவில் வழக்கு தொடர்பில் சிலருடன் பேசுவதற்காக இரண்டு மங்கோலிய அதிகாரிகளுடன் திரு ஷாரிபு, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வருகிறார்,” என மின் அஞ்சல் வழி அந்த மங்கோலிய வழக்குரைஞர் தெரிவித்தார்.

அல்தான் துயாவை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக செத்தேவ் 100 மில்லியன் ரிங்கிட் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி Munkhsaruul குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

தமது மூத்த புதல்வி மரணமடைந்ததைத் தொடர்ந்து தமது மனைவியும் இரண்டு பேரப் பிள்ளைகளும் அனுபவித்துள்ள மன உளைச்சலுக்கும் உடல் சோர்வுக்கும் இழப்பீடாக 100 மில்லியன் ரிங்கிட் கோரி செத்தேவ் 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் தேதி சிவில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தமது வழக்குரைஞர் கர்பால் சிங்-கைச் சந்திப்பார் எனத் தெரிய வருகிறது. அத்துடன் மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாரமுடன் கூட்டம் நடத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு போலீஸ் அதிகாரிகளும் சமர்பித்துள்ள முறையீட்டை முறையீட்டு நீதிமன்றம் விசாரித்து முடிவு தெரிவித்த பின்னரே செத்தேவ்-வின் சிவில் வழக்குப் பரிசீலிக்கப்படும். முறையீட்டு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27,28ம் தேதிகளில் அந்த முறையீட்டை செவிமடுக்கவிருக்கிறது.

இதனிடையே பிரஞ்சு நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை சுவாராம் செய்து வருவதாக நம்பப்படுகிறது.

அந்த விசாரணையில் சாட்சியமளிக்க சுவாராம் பல தனி நபர்களை பரிந்துரைக்கலாம். ஆனால் யாரை அழைப்பது என முடிவு செய்ய வேண்டியது பிரஞ்சு நீதிமன்றமே என்று சுவாராம் இயக்குநர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.

செத்தேவ், நாளை நாடாளுமன்றத்துக்குச் சென்று “சம்பந்தப்பட்ட அமைச்சர்களை” சந்திக்க முயலுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தமது சிவில் வழக்கை எடுத்துரைப்பதற்கு நிருபர்களையும் சந்திப்பார்.