தேசிய உபகாரச் சம்பளத் திட்டமான PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதியை ரத்துச் செய்யுமாறு கோரி 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கோலாலம்பூர் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.
மஸ்ஜித் ஜெமாய்க் (Masjid Jamek) எல்ஆர்டி நிலையத்தில் ஊர்வலத்தை தொடங்கிய அந்த மாணவர்கள் ஜாலான் ராஜா லாவுட்டை நோக்கிச் சென்று தங்களது முக்கிய இலக்கான மெர்தேக்கா சதுக்கத்தைச் சென்றடைந்தனர்.
ஏற்கனவே நிகழ்ந்த ஊர்வலங்களில் செய்ததற்கு மாறாக போலீசார் போக்குவரத்து சுமூகமாக நடைபெறுவதற்கு உதவி செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒடுக்குமுறையைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் மீது இரசாயனம் கலந்த நீரையும் பாய்ச்சவில்லை.
அவர்கள் ‘PTPTN-னை ரத்துச் செய்யுங்கள்’, ‘எங்களுக்கு இலவசக் கல்வி வேண்டும்’ எனக் கூறும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அந்த மாணவர்கள் பிரதமருடைய துணைவியார் ரோஸ்மா மான்சோரின் ஆடம்பர வாழ்க்கை முறைகள் எனக் கூறப்படுவதையும் கண்டித்தனர்.
“ரோஸ்மா பணக்காரர், மக்கள் ஏழைகள் ! அம்னோ/பிஎன் முதலாளித்துவ சின்னங்கள்,” என்றும் அவர்கள் முழங்கினர்.