வரலாறு படைக்கும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி இன்று திறப்பு விழா காண்கிறது

மலேசிய நாட்டின் தமிழ்ப்பள்ளிகளுக்கே உரித்தான பஞ்சக்கோலத்திலிருந்து விடுபட்டு அடுத்த நூற்றாண்டிற்கு வழிகோலும் முன்னுதாரணமாக தலைநிமிர்ந்து நிற்கும் ஷா அலாம், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி இன்று திறப்பு விழா காண்கிறது.

நாட்டில் தோட்டங்களை மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும்போது தோட்ட மக்கள் குடியிறுப்பு, ஆலயம், மற்றும் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்படும் பிரச்சனைகள்  மிட்லண்ட்ஸ் தோட்டத்தையும் விட்டு வைக்கவில்லை.

நூற்றாண்டு கால வரலாற்றைக்கொண்ட  மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஒண்டுவதற்கு இடமின்றி பாரிசான் காலத்தில் பட்ட அவதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. பல முறை இடமாற்றம் செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது.

இப்பள்ளிக்கு செக்சன் ஏழில் உள்ள ஐ-சிட்டி பகுதியில் 1997 ஆம் ஆண்டிலேயே நான்கு ஏக்கர் நிலமாம், அதுவும் முன்பு தோட்ட இடுகாடாக இருந்த நிலத்தில் பள்ளியைக் கட்டுவதற்கு பொதுப்பணி இலாகா 25 லட்சம் வெள்ளியை ஒதுக்கி இருப்பதாக முன்னாள் அமைச்சர் ச.சாமிவேல் 2008 ஆண்டிலேயே அறிவித்தார்.

ஆனால் பாரிசான் ஆட்சியில் 1997 தொடங்கி 2008ம் ஆண்டு வரை 11 ஆண்டுகளாக ஐ-சிட்டியில் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலத்திற்கு பட்டா கேட்கவோ அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யவோ அல்லது பள்ளிக்கு உரிமம் பெறவோ முயலாத பொதுப்பணி இலாக்கா, கல்வி இலாக்கா, மஇகா ஆகியவைகள் ஐ-சிட்டியில் எவ்வண்ணம் தமிழ்ப்பள்ளி கட்ட முடியும்? மக்களை குழப்பிவிட பாரிசான் ஆட்சி விடுத்து வரும் எண்ணற்ற  அறிக்கைகளில் ஒன்றாக இதுவும் அமைந்துவிட்டது.
 

பக்காத்தான் ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகளின் புதிய சகாப்தம்

ஒழுகும் கூரைகள், செல்லரித்த சுவர்கள், சிதலமடைந்த கட்டிடங்கள், இயற்கையால் சிதைக்கப்பட்ட சுற்றுப்புறங்கள் ஆகியவற்றின் கலவைதைதான் தமிழ்ப்பள்ளிகள் என்பது இந்நாட்டில் எழுதப்படாத இலக்கணமாக பாரிசான் ஆட்சியில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதை நேர்மைக் குணம் உடையோர் மறுக்கமாட்டார்கள்.
 
அதே இலட்சணங்களைக் கொண்டு  தற்காலிக பள்ளியாக இயங்கி வரும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றாக  அதே இடத்தில் புதிய பள்ளி கட்டப்பட வேண்டும் என்ற பெற்றோர்களின் கோரிக்கையை பாக்கத்தான் சிலாங்கூர் மாநில அரசு ஏற்று, நான்கு ஏக்கர் அரசு ஒதுக்கீட்டு நிலத்தில் கட்டிடத்தைக் கட்டுவதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கியது.

நகரின் மையப்பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வழங்கப்பட்டதைக் கண்டு மனம் பொறுக்காத அம்னோக்காரர்கள் சுற்றுவட்டார மக்களைத் தூண்டிவிட்டு, செக்சன் 19 மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் கையாண்ட அதே கீழறுப்பு வேலைகளுக்குத் தூபமிட்டனர். பள்ளியின் கட்டுமானத்தை நிறுத்த முயன்றனர். எனினும், உணர்வுள்ள சில மஇகா தலைவர்கள், பல இன பாக்கத்தான் தலைவர்களுடன் ஒன்றுபட்டு  உறுதியான நிலைப்பாடு கொண்டு இனத் தீவிரவாதத்திற்குத் துணை போகாத வட்டார மக்களின் துணையுடன், அம்னோவின் சதிச்செயல்களை முறியடித்தனர்.

பாரிசானின் ஐம்பது ஆண்டுகால ஆட்சிக்கு சவால்!

மத்திய அரசு மக்களை முதன்மைப் படுத்தும் அரசாக இருந்தால் அப்பள்ளிக்கு வாக்களித்த நிதியை இப்போது வழங்கியிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட அந்நிதி என்னவாயிற்று?  இதைப் போன்று இன்னும் எத்தனை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்குவதாகச் சொல்லப்படும்  மானியங்கள் காணாமல் போய்விடுகின்றன! 

பாரிசான் அரசாங்கத்தின் ஐம்பது ஆண்டுகால ஆட்சிக்கு சவால் விடும் வகையில் சராசரிப் பள்ளியாக அல்லாமல் சாதனைப் பள்ளியாக ஷா ஆலம், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை நிறுவி சரித்திரம் படைத்துள்ளது சிலாங்கூர் மாநில பாக்கத்தான் அரசு. இந்த பள்ளி நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்காக எழுதப்படும் புதிய வரலாற்றின் முதல் அத்தியாயமாக நிச்சயம் விளங்கும்.
 

நாட்டிலுள்ள எந்த தமிழ்ப்பள்ளியையும் கூடினபட்சம் அரை மணி நேரத்தில் சுற்றிப் பார்த்து விடலாம். ஆனால் முழுமையாகச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரமும் கூடவே  வழிகாட்டியும் தேவைப்படுகின்ற ஒரு தமிழ்ப்பள்ளி என்றால் அது மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிதான்!
 

பார்த்தவுடன் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு மத்தியில் பார்த்துப் பார்த்து பிரமித்துப் போகின்ற பள்ளியாக விளங்குகிறது மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி.
 

ஷா ஆலம், செக்சன் ஏழில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி.

24 வகுப்பறைகள், கணினி மையம், அறிவியல் கூடம், நூலகம், சிற்றுண்டிச் சாலை இவற்றோடு சுமார்  1,800 பேர் அமரக்கூடிய மண்டபம் என நாட்டில் எந்தத் தமிழ்ப்பள்ளியும் கொண்டிராத வசதிகளை இப்பள்ளி கொண்டுள்ளது.
 

இப்பள்ளியின் நிர்மாணிப்புக்கு 49 இலட்சம் ரிங்கிட் செலவாகியுள்ளது. அதில் 30 இலட்சம் ரிங்கிட்டை மாநில அரசு வழங்கியுள்ளது. எஞ்சிய 19 இலட்சம் ரிங்கிட்டை திரட்டும் பொறுப்பை பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளன.
 

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக் கட்டிடத்தின் தோற்றம் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் வேளையில் அதற்காகச் செய்யப்பட்ட செலவு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இப்பள்ளியை பாரிசான் அரசு கட்டியிருந்தால் செலவு இரண்டு மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
 
1990 ஆம் ஆண்டில் சுமார் 315 மாணவர்களுடன் செயல்பட்ட இப்பள்ளி பற்வேறு பிரச்சனைகளின் காரணமாக தற்போது சுமார் 200 மாணவர்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது இங்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகளால், புதிய கட்டிடத்திற்கு மாறிய ஈராண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஈர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் கூறினார்.

இப்பள்ளி அமைந்துள்ள நான்கு ஏக்கர் நிலம் பள்ளி நிர்வாகத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கல்வியமைச்சு கேட்டுக்கொண்டால் அதனை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் கூறிய அவர், தற்போது பகுதி உதவி பெறும் பள்ளியாக உள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை மத்திய அரசாங்கம் கடமை உணர்வோடு முழு உதவி பெறும் பள்ளியாக மாற்றும் என்ற தனது எதிர்பார்ப்பையும் டாக்டர் சேவியர் வெளியிட்டார்.
 

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர இடத்தில் நிலையான கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்ற தங்களின் தணியாத தாகத்திற்கு இப்போதுதான் பலன் கிடைத்துள்ளது என்று பள்ளியின் வாரியத் தலைவர் க. உதயசூரியன் கூறினார்.
 

பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதில்  அனைத்து வகையிலும் உதவிகள் புரிந்த சிலாங்கூர் மாநில அரசுக்கும், குறிப்பாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கும், பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளியின் நிர்மாணிப்புக்கு கூடுதலாகத் தேவைப்படும் 19 லட்சம் வெள்ளியைத் திரட்டும் முயற்சியில் தாங்கள தீவிரம் காட்டவுள்ளதாகவும் உதயசூரியன் கூறினார்.

இன்று (15. 4. 2012 ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 10.00 க்கு மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 10,000 க்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பர் என்று சேவியர் நம்பிக்கை தெரிவித்தார்.