நேற்று தொடக்கம் மெர்தேக்கா சதுக்கத்தில் முகாமிட்டுள்ள 30 மாணவர்கள் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரி விடுத்த உத்தரவையும் மீறி அங்கு தொடர்ந்து இருக்கப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இன்றிரவு அந்தச் சதுக்கத்தில் அரச இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படவிருப்பதை ஒட்டி மாணவர்கள் தங்களது பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என இன்று நண்பகல் வாக்கில் அவர்களிடம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற துணை அமலாக்க அதிகாரி ஸாவியா டேசன் தெரிவித்தார்.
“மெர்தேக்கா சதுக்கத் துணைச் சட்டங்களின் கீழ் மேயர் ஒப்புதல் இல்லாமல் அந்த இடத்தில் யாரும் எதனையும் கட்டக் கூடாது,” என அவர் மாணவர்களிடம் கூறினார்.
என்றாலும் அதற்கு பத்து நிமிடங்கள் கழித்து தங்களது கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் வரையில் தங்களது குந்தியிருப்பைத் தொடருவதற்கு மாணவர்கள் இணக்கம் கண்டனர்.
“நாங்கள் பின் வாங்க மாட்டோம். நீங்கள் எங்கள் பொருட்களைக் கைப்பற்றி எங்களை வெளியேற்ற விரும்பினால் அது உங்களை பொறுத்தது.”
“நாங்கள் இன்றிரவு மீண்டும் வருவோம்,” என மாணவர் தலைவர்களில் ஒருவரான அடாம் அட்லி அப்துல் ஹலிம் கூறினார்.