13வது பொதுத் தேர்தலுக்கான தங்களது வேட்பாளர் பட்டியல்களை அனுப்புமாறு அனைத்து உறுப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாளை பாரிசான் நேசனல் (பிஎன்) கடிதங்களை அனுப்பும்.
பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவுக்கு இணங்க அந்தக் கடிதங்கள் அனுப்பப்படுவதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார்.
“பட்டியலைக் கொடுப்பதற்கு அவற்றுக்கு இரண்டு வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.
தெங்கு அட்னான் புத்ராஜெயாவில் 700 பேருக்கு ஒரே மலேசியா உதவித் தொகையை வழங்கிய பின்னர் பேசினார்.
ஒராயிரம் மாணவர்கள் அந்த நிகழ்வில் ஒரே மலேசியா கணினியையும் பெற்றுக் கொண்டார்கள்.
அம்னோ வேட்பாளர்களை சோதனை செய்யும் முதல் கட்ட நடவடிக்கை முடிந்து விட்டதாகவும் அவர் சொன்னார். அந்தப் பட்டியல் விரைவில் கட்சித் தலைவருக்கு அனுப்பப்படும்.
“முதல் சோதனையில் பல அம்சங்கள் ஆராயப்பட்டன. கடன்கள், மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் ஆய்வு செய்கிறதா போன்ற விஷயங்கள் அவற்றுள் அடங்கும்.”
பெர்னாமா