அன்வார்: பிகேஆர் இட ஒதுக்கீடுகள் ஏறத்தாழ முடிந்து விட்டன

எதிர்த்தரப்புக் கூட்டணியில் பிகேஆர் சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீடுகள் பேராக், பினாங்கு போன்ற சில மாநிலங்களைத் தவிர ஏறத்தாழ முற்றுப் பெற்று விட்டதாக அதன் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

“இன்னும் விவாதங்கள் தேவைப்படுகின்ற பேராக்கில் இரண்டு இடங்களும் பினாங்கில் ஒர் இடமும் போன்ற ஒரிரு இடங்கள் தவிர பெரும்பாலான மாநிலங்களில் இடஒதுக்கீடுகள் தீர்க்கப்பட்டு விட்டன.”

“கெடாவில் உள்ள 40 நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளில் இன்னும் ஒரிரு இடங்கள் மட்டுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதே அதன் பொருளாகும்,” என கோலாத் திரங்கானுவில் நேற்று திரங்கானு மாநில பிகேஆர் தேர்தல் நடவடிக்கை எந்திரத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அன்வார் நிருபர்களிடம் பேசினார். அந்த நிகழ்வில் திரங்கானு பிகேஆர் தலைவர்  அஸான் இஸ்மாயிலும் உடனிருந்தார்.

பாஸ் கட்சியும் பிகேஆரும் முன்னைப் போல அணுக்கமாக இல்லை என சில தரப்புக்கள் கூறுவதை தாம் ஒப்புக் கொள்ளவில்லை என அன்வார் சொன்னார்.

சந்திப்புக்கள் சுமூகமாக நடைபெற்றுள்ளன. பிரச்னைகள் ஏதும் எழவில்லை. என்றார் அவர்.

“பாஸ் ஆன்மீகத் தலைவர் தோக் குரு நிக் அஜிஸ், பாஸ் தலைவர் துவான் குரு அப்துல் ஹாடி ஆகியோருடன் என் உறவுகள் முன்னைக் காட்டிலும் அணுக்கமாக உள்ளன.”

திரங்கானுவில் பிகேஆர் அடுத்த தேர்தலில் மூன்று நாடாளுமன்ற 11 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்பிய வேளையில் அதற்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுமாக மொத்தம் 7  இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது பற்றிக் கருத்துரைத்த அன்வார் பாஸ் கட்சிக்கு அதனைச் செய்வதற்கு  உரிமை இருந்த போதிலும் அந்த விஷயத்தை இன்னும் விவாதிக்க முடியும்  என்றார்.

-பெர்னாமா