தமிழீழம் தொடர்பில் வாக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து சென்று தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பொன்றை இலங்கையில் அனைத்துலகம் நடத்த வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

31 ஆயிரத்திற்கும் மேல்பட்ட கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கை மனுவொன்றை குறித்த அமைப்பு அமெரிக்க அரச துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘TAMILS FOR OBAMA’ அமைப்பு பிரதிநிதிகள் இரகசியமான முறையில் அமெரிக்காவின் அரச துறைத் துணை செயலாளர் ராபார்ட் ஓ பிளேக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அத்துடன் தங்களது கோரிக்கை மனுவை அமெரிக்க அரச துறைச் செயலாளர் கிளாரி கிளிண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமாக இந்த கோரிக்கை மனுவில் துருக்கி பிரிவினைவாதிகளும், தமிழர் அல்லாதா வேற்றினத்து மக்களும் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரசு இனப்படுகொலை மேற்கொண்டதாகவும், இலங்கை அரச படையினர் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ததாகவும் இலங்கை அரசுக்கு எதிராக அம்மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றம் வாக்கெடுப்பு மூலம் சூடானை பிளவுபடுத்தியது போன்றே இலங்கையில் தமிழீழம் அமைய இலங்கைத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமெரிக்காவிடம் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.

TAGS: