டாக்டர் மகாதீர் சிறிய அறுவைச் சிகிச்சைக்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தில் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மூக்கில் ஏற்பட்ட சதை வளர்ச்சியை அகற்றுவதற்காக இன்று காலை HUKM என்ற தேசியப் பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவ மய்யத்தின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவின் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் அப்துல்லா  சானி முகமட் தலைமையில் மருத்துவக் குழு ஒன்று காலை மணி 9.30 தொடக்கம் ஒரு மணி நேரத்துக்கு அந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது.

மகாதீர் இப்போது வழக்கமான வார்டில் கண்காணிப்பில் இருந்து வருவதாக அவரது உதவியாளர் சுஃபி வெளியிட்ட அறிக்கை கூறியது.

அவர் அடுத்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாதீரை இப்போது பார்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மகாதீர் 22 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பின்னர் 2003ம் ஆண்டு பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அவர் இன்றும் செல்வாக்குமிக்க அரசியல் பிரமுகராகத் திகழ்கிறார்.

அவர் அரசியல் பற்றியும் நடப்பு விவகாரங்கள் பற்றியும் அடிக்கடி கருத்துக்களை  வெளியிட்டு வருகிறார்.

செய்தி நிறுவனங்கள்