கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான தனது செய்தி அறிக்கைகளில் ஒன்றை ஆஸ்ட்ரோ தணிக்கை செய்ததாகக் கூறப்படுவதை பிபிசி என்ற பிரிட்டிஷ் ஒலி ஒளிபரப்புக் கழகம் விசாரிப்பதாக தகவல்களை அம்பலப்படுத்து சரவாக் ரிபோர்ட் இணையத் தளம் அறிவித்துள்ளது.
அது பிபிசி ஒளிபரப்பில் வெளியான அசல் படச் சுருளையும் ஆஸ்ட்ரோ தணிக்கை செய்து ஒளிபரப்பான படச் சுருளையும் ஒப்பிட்டு பார்க்கும் வீடியோ ஒன்றை அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்ட்ரோ வழியாக ஒளிபரப்பான போது அதன் படச் சுருளில் 30 வினாடிகளுக்கு மேற்பட்ட விவரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
“ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான படச் சுருளில் முப்பது வினாடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் சுடுவது உட்பட மூன்று தனித்தனி ஒளிப்பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.”
“ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடத்தப்பட்ட பேட்டிகள் நீக்கப்பட்ட மற்ற ஒளிப்பதிவுகளாகும். நியாயமான தேர்தல்களுக்கான உரிமையை நிலை நிறுத்துவதற்காக தாங்கள் சாலைகளுக்கு சென்றதாக அந்த பேட்டியில் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்கியுள்ளனர்,” என அந்த இணையத் தளம் குறிப்பிட்டது
அந்த இணையத் தளம் தகவல் கொடுத்த பின்னர் “உண்மைகளை” அறிந்து கொள்வதற்காக “அவசரமான விசாரணைகள்” தொடங்கப்பட்டுள்ளதாக பிபிசி விடுத்த அறிக்கை கூறியது.
உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படும் வாரத்தில் சுதந்திரமான, பாகுபாடற்ற செய்திகளை பெறுவதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்தைத் தருகிறது என்றும் பிபிசி அறிக்கை குறிப்பிட்டது.
அந்த விவகாரம் மீது ஆஸ்ட்ரோ பிபிசி-க்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
ஆஸ்ட்ரோவில் கொடுக்கப்படுகின்ற அலைவரிசைகளில் ஒன்றான பிபிசி வோர்ல்ட் (BBC World)ல் அந்தச் செய்தி சேர்க்கப்பட்டிருந்தது. பிபிசி நிருபரான எமிலி புச்சானான் பெர்சே பேரணி பற்றி இரண்டு நிமிட அறிக்கையைத் தயாரித்திருந்ததாக சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் குறிப்பிட்டது.
ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான செய்தியில் காட்டப்பட்ட படச் சுருள் தொழில் நிபுணத்துவ ரீதியில் வெட்டப்பட்டுள்ளதாகவும் (editing) மலேசிய அதிகாரிகளுக்கு நல்ல தோற்றத்தத் தரும் பொருட்டு வேண்டுமென்றே அந்தப் படச் சுருள் வெட்டப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத் தளம் கூறியது.
அத்துடன் ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான அல் ஜாஸிரா செய்தியும் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறிக் கொண்டது. ஆனால் எந்த பகுதிகள் நீக்கப்பட்டன என்பதை அது தெரிவிக்கவில்லை.
கூட்டரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள ஒரே ஒரு துணைக்கோள ஒளிபரப்பு சேவை ஆஸ்ட்ரோவாகும். அதற்கு அம்னோவுடன் அணுக்கமான தொடர்புடையவர் எனக் கருதப்படும் ஆனந்த கிருஷ்ணன் அதன் உரிமையாளர் ஆவார்.
சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனின் மைத்துனியான பத்திரிக்கையாளர் கிளார் ரியூகாசல் பிரவுன் தோற்றுவித்தார்.