வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படுகிறது

தேர்தல் ஆணையம் இன்று தொடக்கம் அடுத்த 14 நாட்களுக்கு 2012ம் ஆண்டு முதல் கால் பகுதிக்கான துணை வாக்காளர் பட்டியல்களை நாடு முழுவதும் 952 இடங்களில் காட்சிக்கு வைக்கிறது.

15 மாநில தேர்தல் அலுவலகங்கள், கணினி மயமாக்கப்பட்டுள்ள 451 அஞ்சலகங்கள், 48  மாவட்ட/நகராட்சி மன்ற அலுவலகங்கள், 194 பல நோக்கு மண்டபங்கள்/ருக்குன் தெத்தாங்கா சாவடிகள்/சமூக மண்டபங்கள்/ பெங்குலு அலுவலகங்கள்/மண்டபங்கள், 34 இதர இடங்கள் ஆகியவற்றில் அந்த பட்டியல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையம் விடுத்த அறிக்கை கூறியது.

அந்த வாக்காளர் பட்டியல்களை தேர்தல் ஆணைய இணையத் தளமான www.spr.gov.my   இல் பார்வையிடலாம்.

இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் வாக்காளர்களாகப் பதிந்து கொள்வதற்கு 289,255 புதிய விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் வாக்களிப்பு மாவட்டத்தை மாற்றிக் கொள்வதற்கு 104,430  விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் அந்த ஆணையம் கூறியது.

“தங்கள் வாக்களிப்பு மாவட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளவர்களும் புதிய விண்ணப்பதாரர்களும் பட்டியல்களை சரி பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.”

வாக்காளர்களாகப் பதிந்து கொள்வதற்கு புதிதாக விண்ணப்பித்து தங்களது பெயர்கள் பட்டியலில் இல்லாதவர்கள் பி பாரத்தை பூர்த்தி செய்து கோரிக்கை சமர்பிக்கலாம்.

பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் பற்றி ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவோர் சி பாரத்தைப் பூர்த்தி செய்து 20 பெயர்கள் வரை ஆட்சேபிக்க முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட பாரங்கள் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காலத்தில் வேலை நாட்களில் அந்தப் பதிவுப் பகுதிக்கான பதிவதிகாரியிடம் (மாநில தேர்தல் இயக்குநர்) சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அறிக்கை குறிப்பிட்டது.

ஆட்சேபத்தைப் பதிவு செய்ய விரும்புவோர் அவ்வாறு செய்வதற்கு வலுவான காரணங்கள் தங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அது அறிவுரை கூறியது.

காலமான வாக்காளர்கள், குடியுரிமையை இழந்த வாக்காளர்கள் போன்ற பட்டியல்களிலிருந்து நீக்கப்படும் பெயர்கள்தான் காட்சிக்கு வைக்கவில்லை என்றும் அது தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் பட்டியல்களை சரி பார்ப்பதற்கு உதவியாக ஆணையம் அவற்றுக்கு நீக்கப்படும் பெயர்களைக் கொண்ட சிடி ஒன்றை வழங்கும்.

தேர்தல் ஆணையத் தலைமையகத்தின் தொலைபேசி எண் 03-8885 6565 அல்லது தொலைநகல்  03- 88889117 வழியாக அல்லது எந்த ஒரு மாநிலத் தேர்தல் அலுவலகம் வழியாகவும் மேல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

பெர்னாமா