பத்திரிக்கையாளர்களை சாந்தப்படுத்துவதற்கு புத்ராஜெயா நடவடிக்கை எடுக்கிறது

பெர்சே பேரணியின் போது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட  பத்திரிகையாளர்களுக்கு போலீசார் காயங்களை எற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புத்ராஜெயா செய்தி நிறுவனங்களுடன் உறவுகளை சுமூகமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் நேற்று அந்த நடவடிக்கையைத் தொடக்கி வைத்ததாக தெரிய வருகிறது. அவர் நேற்று பல சீன மொழி நாளேடுகளின் ஆசிரியர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீனர் விவகார உதவியாளர் வோங் நைய் சீ-யும் பத்திரிக்கைச் செயலாளர் ஜோஆன் லாய்-யும் உடன் இருந்தார்கள்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த அந்தச் சந்திப்பின் போது பெர்சே 3.0 பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் பத்திரிக்கையாளர்கள் மீது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது மீது கருத்துக் கூறுமாறும் ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதனிடையே இன்று புக்கிட் அமான் தேசியப் போலீஸ் படைத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் போலீஸ் பேராளர்கள் எல்லா முக்கிய செய்தி நிறுவனங்களையும் சந்திக்கின்றனர்.

அந்தக் கூட்டத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அது பெர்சே 3.0 பேரணியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால் அந்த கூட்டத்துக்கு அழைக்கப்படாத செய்தி அமைப்புக்களில் மலேசியாகினியும் ஒன்றாகும்.

ஹிஷாமின் உத்தரவு என்ன ?

உள்துறை அமைச்சார் ஹிஷாமுடின் ஹுசேன் பெர்சே 3.0 நிகழ்ந்ததற்கு முதல் நாளன்று ஊடகத் தலைவர்களை அழைத்து போலீஸ் வன்முறை பற்றிய செய்திகளை தவிர்க்குமாறு உத்தரவிட்டதாக நேற்று பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கான ஆதாரம் பிகேஆர்-டம் இருப்பதாகவும் பத்திரிக்கை சட்டங்களை சீர்திருத்துவதாக நஜிப் அளித்த வாக்குறுதிகள் வெறுமையாகி விட்டதாகவும் அவர் சொன்னார்.

சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான போலீஸ் வன்முறை பற்றிய செய்திகளை மலாய், ஆங்கில மொழி நாளேடுகள் பொதுவாக தவிர்த்த போதிலும் சீன மொழி நாளேடுகள் நேற்று வரை அந்த விஷயத்தை பெரிய செய்திகளாக போட்டு வந்துள்ளன.

நேற்று சைனா பிரஸ் முதல் பக்கத்தில் காயமடைந்த 13 பத்திரிக்கையாளர்களின் படங்களை போட்டு  “பேரணியில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் செய்த தவறு என்ன ?” என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த விவகாரத்தை விசாரித்து தவறு செய்துள்ள போலீஸ்காரர்கள் மீது குற்றப்பதிவு செய்யுமாறு தேசியப் பத்திரிக்கையாளர் சங்கம் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.