புர்சா மலேசியா பங்குச் சந்தையில் மலேசிய விமான நிறுவனம் (எம்ஏஎஸ்), ஏர் ஏசியா ஆகிவற்றின் பங்குகள் இன்று காலை 9 மணி முதல் வர்த்தகம் செய்யப்படுவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிறுவன அறிவிப்பு வெளியிடப்படுவதற்காக அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுடனான பங்குப் பரிவர்த்தனை திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக எம்ஏஎஸ் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
364 மில்லியன் அமெரிக்க டாலர் (1.1 பில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள அந்த உத்தேசப் பிணைப்புக்கு 20,000 உறுப்பினர்களைக் கொண்ட எம்ஏஎஸ் ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஏர் ஏசியாவைத் தோற்றுவித்த டோனி பெர்னாண்டெஸும் செலவுகளைக் குறைக்கும் அவரது தீவிரத் திட்டமும் எம்ஏஎஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்வது போன்ற தோற்றத்தை அந்தப் பங்குப் பரிவர்த்தனை உடன்பாடு தருவதாகவும் அது குறிப்பிட்டது.
அந்த உடன்பாட்டின் கீழ் ஏர் ஏசியாவில் கஸானா ஹோல்டிங்ஸ் பங்குகளைப் பெறும். அதே வேளையில் ஏர் ஏசியாவில் 26 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் டுயூன் ஏர் (Tune Air) மலேசிய விமான நிறுவனத்தில் பங்குகளைப் பெறும்.
-ராய்ட்டர்ஸ்