ஆர்ப்பாட்டங்களின் போது கூட்டத்தினரை கட்டுப்படுத்துவதற்கு இரசாயனம் கலந்த நீரைப் பாய்ச்சுவது மிகக் குறைந்த அளவு தாக்கத்தைக் கொண்டுள்ள வழி எனப் போலீஸ் கூறுகிறது.
அது, நிபுணர்கள் சான்றிதழ் அளித்துள்ள முறை என்றும் உலகம் முழுவதும் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்றும் அது தெரிவிக்கிறது.
“நீரைப் பாய்ச்சுவது, மிகக் குறைந்த அளவு பாதிப்பைக் கொண்டுள்ள வழி” என தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் கூறினார்.
அவர் இன்று புக்கிட் அமானில் மூத்த ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கும் நிகழ்வில் உரையாற்றினார்.
“கலகத்தை ஒடுக்குவதற்கான அந்த வழியை மலேசியப் போலீசார் மட்டும் பயன்படுத்தவில்லை. உலகம் முழுவதும் உள்ள போலீஸ்காரர்களும் அதனையே பின்பற்றுகின்றனர். அத்துடன் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களும் அதற்குச் சான்றிதழ் அளித்துள்ளனர்,” என்றார் அவர்.
அத்துடன் கடந்த சனிக்கிழமையன்று FRU என்ற கலகத் தடுப்புப் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீரைப் பாய்ச்சுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாகவும் இஸ்மாயில் சொன்னார்.
“கூட்டத்தினர் 200 மீட்டர் முன்னேறிய பின்னரே அவர்கள் நீரைப் பாய்ச்சியுள்ளனர்.”
கூட்டத்தினர் மீது கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதும் நீரைப் பாய்ச்சுவதும் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காது என கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதற்குப் பின்னர் ஐஜிபி இவ்வாறு அறிக்கை விடுத்துள்ளார்.