அம்னோ உறுப்பினராக இருந்ததை ஆறு நாட்களுக்கு முன்பு ஒப்புக் கொண்ட இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், இப்போது அதனை மாற்றிக் கொண்டுள்ளார்.
தாம் ஆளும் கட்சியில் ஒரு போதும் இருந்ததில்லை என அவர் இப்போது சொல்கிறார்.
“நான் அம்னோ உறுப்பினர் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் கூறுவதை வன்மையாக மறுக்கிறேன். அவர் சொல்வது போல நான் ஒரு போதும் பதிவு செய்து கொண்டதில்லை. என்னுடய கௌரவத்துக்கு இழுக்கைக் கொண்டு வருவதும் இசி-யின் நம்பகத்தன்மைக்கு களங்கம் விளைவிப்பதும் சைபுதினின் தீய நோக்கங்கள்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்பும் துணைத் தலைவர் வான் அகமட்டும் அம்னோ உறுப்பினர்கள் என சைபுதின் கடந்த புதன்கிழமை குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு அடுத்த நாள் வான் அகமட், தாம் வெகு காலத்துக்கு முன்பு அம்னோ உறுப்பினராக இருந்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அது அந்தத் தொகுதியில் என்பது நினைவில் இல்லை என்றார் அவர்.
ஆனால் தாம் அம்னோ நடவடிக்கைகளிலோ கட்சிக் கூட்டங்களிலோ பங்கு கொண்டதில்லை என்றும் தாம் இன்னும் உறுப்பினரா என்பதும் தமக்குத் தெரியாது என்றும் வான் அகமட் சொன்னார்.
அதே வேளையில் தாம் அம்னோ உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கவும் இல்லை. பதிவு செய்யவும் இல்லை எனக் கூறிய அப்துல் அஜிஸ், தமது பெயர் பட்டியலில் இருக்கும் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை.
“நான் எப்போது எங்கு அம்னோ உறுப்பினரானேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. நான் 1970ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றதும் யாராவது ஒருவர் தம்மை சேர்த்திருக்கலாம்,” என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து சைபுதின் கூடுதல் தகவல்களை வெளியிட்டார். அப்துல் அஜிஸ் அம்பாங் அம்னோ தொகுதியிலும் வான் அகமட் பாசிர் மாஸ் தொகுதியிலும் உறுப்பினர்களாக இருப்பதாக சைபுதின் கூறிக் கொண்டார்.
இதனிடையே இன்று விடுத்துள்ள அறிக்கையில் வான் அகமட், சைபுதின் குறிப்பிட்டுள்ள பாசிர் மாஸ் அம்னோ உறுப்பினர் தம்மைப் போன்று ஒரே பெயரைக் கொண்ட இன்னொரு மனிதர் எனத் தெரிவித்துள்ளார்.
ஆகவே சைபுதின் தமக்கு எதிராக “பெரிய பொய்யை” சொல்லியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“நான் கிளந்தானைச் சேர்ந்தவன் அல்ல. நான் பாசிர் மாஸ்-ஸிலோ அல்லது கிளந்தானில் எந்த இடத்திலுமோ நான் வசித்தது இல்லை.”
தம்முடன் ஒரே பெயரைக் கொண்டுள்ள அந்த அம்னோ உறுப்பினருடைய விவரங்களையும் வான் அகமட் வெளியிட்டார்.
Wan Ahmad Bin Wan Omar
I/C no: 490101-03-5179 (old I/C no: 2756290)
Umno membership no: 2374564
Branch: Kubang Bunggor, Pasir Mas, Kelantan
“நான் திரங்கானுவைச் சேர்ந்தவன். கிளந்தானிலிருந்து வந்தவன் அல்ல என நான் கூற விரும்புகிறேன். என் அடையாளக் கார்டு எண் மேலே கூறப்பட்டது அல்ல,” என அவர் மேலும் சொன்னார்.
“ஆகவே சைபுதின் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனெனில் அவரது குற்றச்சாட்டு பொய்யானது, எனது நற்பெயருக்கும் இசி துணைத் தலைவர் என்ற கௌரவத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் அவதூறு ஆகும்.” என வான் அகமட் கூறினார்.
“அரசியல் நோக்கம் கொண்ட அவரது நடவடிக்கை கூட்டரசு அரசமைப்பின் 114வது பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இசி-யின் நம்பகத்தன்மைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.”
“சைபுதின் தமது பொய்க்கு பொறுப்பேற்குமாறு செய்யப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.