கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த பெர்சே பேரணி 3.0 மீதான தனது செய்திகளும் படச்சுருளும் தணிக்கை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி அனைத்துலக செய்தி கட்டமைப்பான அல் ஜாஸிரா மலேசிய துணைக் கோள ஒளிபரப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது.
கத்தார், டோஹாவில் உள்ள அல் ஜாஸிரா ஆங்கிலப் பிரிவின் தலைமையகத்திலிருந்து மலேசியாகினிக்கு மின் அஞ்சல் வழி அனுப்பப்பட்ட அறிக்கையில் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜாஸிரா செய்தி அறிக்கைகளில் நிகழ்ந்துள்ள சாத்தியமான தணிக்கைகள் பற்றி ஆஸ்ட்ரோ இது நாள் வரை தனக்கு எந்தத் தகவலும் கொடுக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
“எங்கள் செய்தி அன்றைய நிகழ்வுகளின் உண்மையான தொகுப்பாகும். எங்களுடைய ஆசிரியர் பகுதி வேலையில் தலையிடுவது சரி அல்ல. உலகில் எந்தப் பகுதியிலும் இன்னொரு விநியோக ஒளிபரப்பில் நாங்கள் இது போன்று தணிக்கை செய்யப்படவில்லை,” என்றும் அது கூறியது.
அன்றைய தினம் தனது நிருபர் ஹாரி பாவ்செட் செய்தி எந்த வகையில் “உள்நாட்டு உள்ளடக்க விதிமுறைகளை” மீறியது என்பதையும் ஆஸ்ட்ரோ விவரமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அல் ஜாஸிரா கோரியுள்ளது.
“மீறல்கள் எனக் கூறப்படும் விஷயங்களை ஆஸ்ட்ரோ தெளிவாக விளக்க வேண்டும். அத்துடன் தணிக்கை செய்வது என்ற முடிவுக்கு அது எப்படி வந்தது என்பதையும் அறிய விரும்புகிறோம்.”
தகவல்களை அம்பலப்படுத்தும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் கூறிக் கொண்டுள்ளது போல பெர்சே மீதான பாவ்செட் செய்தியிலும் படச்சுருளிலும் எந்த இடங்களில் வெட்டப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
போலீஸ் தாக்குதலைப் படம் பிடிப்பதிலிருந்து தடுக்கப்பட்டார்
அன்றைய தினம் போலீஸ் வன்முறை பற்றிக் குறிப்பிட்ட பாவ்செட் “போலீஸ் மிகவும் முரட்டுத்தனமாக” நடந்து கொண்டதாக வருணித்திருந்தார். அல் ஜாஸிராவின் கேமிராவும் ‘நொறுக்கப்பட்டது’ என்றும் அவர் கூறியிருந்தார்.
அல் ஜாஸிரா கேமிரா படப்பிடிப்பாளர் ரே ஜோன்ஸ் தலையில் அடிக்கப்பட்டதாகவும் பாவ் செட்-டை போலீஸ் பிடித்துக் கொண்டதாகவும் அவர் பின்னர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கும் மற்ற போலீஸ்காரர்களை தாங்கள் படம் பிடிப்பதை அவர்கள் தடுத்தனர்.”
பெர்சே 3.0 பேரணி மீதான தங்களது செய்தியும் படச்சுருளும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக புகார் செய்துள்ள இரண்டாவது அனைத்துலக செய்தி கட்டமைப்பு அல் ஜாஸிரா-வாகும்.
ஆஸ்ட்ரோவில் கிடைக்கும் பிபிசி வோர்ல்ட் என்னும் அலைவரிசையில் ஒளிபரப்பான பெர்சே மீதான தனது இரண்டு நிமிட படச்சுருள் தணிக்கை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த விவகாரம் மீது “அவசரமான விசாரணைகளை” அந்த பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது.
பிபிசி தகவலை தணிக்கை செய்ததை ஒப்புக்கொண்ட ஆஸ்ட்ரோ, தேசிய விதிகளுக்கு இணங்க தான் அவ்வாறு செய்ததாக கூறிக் கொண்டது.