பிரஞ்சு வழக்குரைஞர்கள்: ” நஜிப் பெரிமெக்காருக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கோரினார்”

பிரான்ஸ்- மலேசிய ஆயுதப் பேரங்களை விசாரிக்கும் பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர்கள், அப்போதைய தற்காப்பு அமைச்சரான நஜிப் அப்துல் ரசாக், ஒர் உள்ளூர் நிறுவனமான பெரிமெக்காருக்காக பிரஞ்சு தற்காப்புத் தளவாட தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்-னின் துணை நிறுவனமான டிசிஎன்ஐ-டமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை ( 3 பில்லியன் மலேசிய ரிங்கிட்)  கோரியதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்துள்ளனர்.

2001ம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் தேதி தம்முடன் சந்திப்பு நடத்துவதற்கு ஒரு முன் நிபந்தனையாக நஜிப் பெரிமெக்காருக்கு அந்தத் தொகையைக் கோரியதை தொலைநகல் ஒன்று காட்டுவதாக அரசு சாரா அமைப்பான சுவாராம் இன்று வெளியிட்ட பிரஞ்சு அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்களுடைய ஆவணம் தெரிவித்தது.

2001ம் ஆண்டு ஜுன் முதல் தேதியிடப்பட்ட அந்தத் தொலைநகல் Thales Asia International என்னும் தனியார் நிறுவனத்தின் மலேசியப் பேராளரான Francois Dupont-டமிருந்து D Arnaud என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Thales நிறுவனத்தைச் சேர்ந்த ஒர் அதிகாரியான Henri Gide அலுவலகத்தில் பிரஞ்சுப் போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 153 ஆவணங்களில் அந்தத் தொலை நகலும் ஒன்றாகும்.

அந்த 153 ஆவணங்களும் சுவாராமுக்குக் காட்டப்பட்டுள்ளன.