ஒரு சாட்சி, சபீனா வெளியிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உதவ மறுத்தால் பிரஞ்சு நீதிபதி ஒருவர் அனைத்துலகக் கைது ஆணையை பிறப்பிக்க முடியும்.
இவ்வாறு பிரஞ்சு வழக்குரைஞரான ஜோசல் பிரெஹாம் கூறியிருக்கிறார். அவர், ஆயுத விற்பனையில் பல மில்லியன் ரிங்கிட் கையூட்டாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது சிவில் வழக்குத் தொடுத்துள்ள மலேசிய அரசு சாரா அமைப்பான சுவாராம் சார்பில் அவர் ஆஜராகிறார்.
கடைசி முயற்சியாக இண்டர்போல் என்ற அனைத்துலகப் போலீஸ் அமைப்புக்கு “சிவப்பு விழிப்பு நிலை” அனுப்பப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சபீனாவை ஏற்றுக் கொள்ள சாட்சி மறுத்தால் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவரைக் காட்டாயப்படுத்தும் நோட்டீசை வெளியிட முடியும். அதனையும் சாட்சி ஏற்றுக் கொள்ள மறுத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட முடியும்.”
“அந்தக் கைது ஆணை பிரஞ்சுப் பிரதேசங்களில் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் நீதிபதி அவசியம் எனக் கருதினால் அது அனைத்துலக மயமாக்கப்படலாம்.”
பிரஞ்சு விசாரணைக்கு தாமும் தமது அமைச்சைச் சேர்ந்த யாரும் உதவப் போவதில்லை என தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கடந்த மாதம் கூறியிருந்தார்.
சுவாராம் முன்மொழிந்துள்ள ஏழு சாட்சிகள் அடங்கிய பட்டியலில் ஸாஹிட்டும் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்தப் பட்டியலை பிரஞ்சு விசாரணை நீதிபதியான Roger Le Loire ஏற்றுக் கொண்டுள்ளார்.