மலேசியாகினி உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை ஒட்டி, பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு இன்று 30 நிமிடங்களுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
கோலாலம்பூரில் பங்சார் உத்தாமாவில் அமைந்துள்ள அந்த செய்தி இணையத் தளத்தின் அலுவலகத்துக்கு வெளியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மலேசியாகினியின் 50 ஊழியர்களுடன் மற்ற ஊடகங்களின் ஊழியர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றிய செய்திகளை சேகரிக்க வந்த நிருபர்கள் உட்பட அங்கிருந்த அனைவரும், ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது தங்களது சகாக்கள் தாக்கப்பட்டது மீதான தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் அவர்கள் மஞ்சள் நிற நாடாக்களையும் கைகளில் கட்டியிருந்தனர்.
“வன்முறையை நிறுத்துங்கள்”, பத்திரிக்கைகளுக்கு விடுதலை கொடுங்கள்” என்ற முழக்கங்களுக்கு இடையில் மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கானும் ஆசிரியர் குழுத் தலைவர் பாத்தி அரிஸ் ஒமாரும் தங்களது கோரிக்கைகளை வாசித்தனர்:
-பெர்சே 3.0ன் போது நிகழ்ந்த வன்முறைகளை சுயேச்சைக் குழு ஒன்று விசாரித்த பின்னர் அந்தத் தாக்குதல்களை நடத்திய அனைவரும் திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
-எல்லாத் தரப்புக்களும் தாங்கள் கைப்பறிய எந்த ஊடகப் பொருட்களையும் அவற்றின் மூல வடிவத்தில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நிருபர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் அவர்களுடைய சாதனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்.
-அரசாங்கம், அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட எல்லாத் தரப்புக்களும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் நடத்தக் கூடாது.
பிரி மலேசியா டுடே, சுவாரா கெஅடிலான், ஒரியண்டல் டெய்லி ஆகியவை உட்பட அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றிய செய்திகளை சேகரிக்க வந்த நிருபர்கள், சுலோகங்களை முழ்ழங்குவதுல் இணைந்து கொண்டதுடன் பதாதைகளை ஏந்தியிருந்த மலேசியாகினி ஊழியர்களுடன் படமும் பிடித்துக் கொண்டனர்.
‘பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துங்கள்’, ‘நாங்கள் வலிமையான பேனாவை ஆயுதமாக வைத்துள்ளோம்’, ‘பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஒலி எழுப்புங்கள்’ எனக் கூறும் வாசகங்கள் அந்தப் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தன.
‘பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஒலி எழுப்புங்கள்’ என்ற வாசகத்தை படித்த பல மோட்டாரோட்டிகள் உடனடியாக ஒலி எழுப்பினர்.
‘Aunty Bersih’ எப அழைக்கப்பட்டும் அனி ஊய் சியூ லான், கம்போங் துங்கு சட்ட மன்ற உறுப்பினர் லாவ் வெங் சான், பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் ஹிஷாமுடின் ராயிஸ், சுதந்திரமான பத்திரிக்கைத் துறைக்கான மய்யத்தின் நிரவாக அதிகாரி மாஸ்ஜாலிசா ஹம்சா, பேரணியின் போது போலீஸ் தம்மைத் தாக்கியதாக கூறியுள்ள மலாய் மெயில் படப்பிடிப்பாளர் முகமட் அரிப் கார்த்தோனோ ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த அமைதியான ஆர்ப்பாட்டம் பிற்பகல் மணி 12.30க்கு முடியும் வரையில் 10 போலீஸ் அதிகாரிகள் அதனைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிலும் தலையிடவில்லை.