எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் மீது தாம் தொடுத்துள்ள அவதூறு வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்தத் தகவலைத் வெளியிட்ட அன்வார் வழக்குரைஞரான ஜே லீலா, நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆனால் விவரங்கள் இன்னும் ரகசியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“அந்தத் தீர்வுக்கான நிபந்தனைகள் இன்னும் ரகசியமாக இருக்கின்றன. செலவுத் தொகை குறித்து இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.
“தீர்வு காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் விசாரணைக்காக குறிக்கப்பட்ட தேதிகள் காலியாகி விட்டதாக அறிவிப்பதற்கு நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.”
அந்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் வீ-யை பென் சான் பிரதிநிதித்தார்.
2007ம் ஆண்டு மாச்சாப் இடைத் தேர்தலின் போது செராமா நிகழ்வு ஒன்றின் போது வீ அவதூறான சொற்களைக் கூறியதாக குறிப்பிட்டு அன்வார் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி அவருக்கு எதிராக அவதூறு வழக்கைச் சமர்பித்தார்.