அம்பிகா வீடு பெர்சே ஆதரவு- எதிர்ப்பு மய்யமாக மாறுகிறது

பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு வெளியில் இன்று பிற்பகல் நான்கு பெர்சே ஆதரவு-எதிர்ப்புக் குழுக்கள் ஒன்று கூடத் திட்டமிட்டிருப்பதால் அங்கு நிலைமை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே பேரணியின் போது இழப்பு ஏற்பட்டதாகக் கூறிக் கொண்டு இன்று பிற்பகல் மணி 3.30 தொடக்கம் புக்கிட் டமன்சாராவில் உள்ள அந்த இடத்தில் உணவுப் பொருட்களையும் மற்ற பொருட்களையும் விற்கும் சாலைச் சந்தையை போடுவதற்கு வணிகர் ஜமால் முகமட் யூனுஸ் தலைமையிலான ஒரு குழு திட்டமிட்டுள்ளது.

Gerakan Belia Gagasan 1Malaysia என அழைக்கப்படும் அமைப்பின் தலைவர் ஷாருல் நாஸ்ருன் கமாருதின் தலைமையில் இன்னொரு குழு தூய்மையான நேர்மையான தேர்தல் இயக்கத்தை எதிர்க்கும் பொருட்டு ஹலாவ் 1.0 ( வெளியேற்றுங்கள் ) என்ற தனது சொந்த ஆர்ப்பாட்டத்தை மாலை மணி 4.30க்கு அங்கு நடத்த எண்ணியுள்ளது.

இதனிடையே பெர்சே ஆதரவு அமைப்பான WargaAman, பெர்சே தலைவருக்கு ஆதரவாக பிற்பகல் 2 மணிக்குக் கூடுவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது. அதே வேளையில் பெர்சே-யின் சொந்த வழிகாட்டல் குழு அங்கு பிற்பகல் 3 மணியிலிருந்து கூட்டத்தை நடத்துகிறது.

இன்று காலை 10 மணி தொடக்கம் டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் 10 அதிகாரிகள் சாலைத் தடுப்புக்களுடன் ஜாலான் செத்தியாகாசே 1-லும் ஜாலான் செத்தியாகாசே 3-லும் தயாராக இருந்தனர்.

நிலைமையைக் கண்காணிப்பதற்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக ஒர் அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எப்போது வரை எனக் கேட்கப்பட்ட போது “நாங்கள் பார்ப்போம்” என அவர் பதில் அளித்தார்.

பல சீன ஊடகங்களின் நிருபர்களும் அங்கு காணப்படுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி எழுதப்படும் வரையில் போலீஸ்காரர்கள் யாரும் தென்படவில்லை.

அம்பிகா விட்டுக்கு முன்னால் உள்ள சாலையில் கடைகளை அமைப்பதற்கு 60 சிறு வணிகர்கள் சமர்பித்த விண்ணப்பத்தை டிபிகேஎல் கடந்த திங்கட்கிழமை நிராகரித்தது.

என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியின் போது தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அந்த சந்தைக் கூடத்தை நடத்துவதில் ஜமால் பிடிவாதமாக இருக்கிறார்.

பல உணவு விடுதிகளையும் ஆடம்பரக் கார் விற்பனை உரிமத்தையும் பெற்றுள்ள ஜமால் தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் பொருட்டு மொத்தம் 1.5 மில்லியன் ரிங்கிட் பெறுமதியுள்ள இரண்டு ஆடம்பரக் கார்களையும் வழங்க முன் வந்துள்ளார்.