பெர்சே 3.0 பேரணி பற்றிய வீடியோ பதிவை வெளியிடப்போவதாகவும் பொதுமக்கள் அதனைப் பார்த்து அவர்களே அப்பேரணியில் என்ன நடந்தது என்பதை முடிவு செய்யட்டும் என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் கூறியிருந்தார்.
அமைச்சரின் அந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், போலீசார் வசம் இருக்கும் 73 மணி நேர ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணி சம்பவங்கள் பற்றி பதிவு செய்யப்பட்ட அனைத்தையும் வெளியிடுமாறு உள்துறை அமைச்சர் ஹிசாமுடினுக்கு சவால் விட்டார்.
உள்துறை அமைச்சு அதன் வலைதளத்தில் திருத்தியமைக்கப்பட்ட வீடியோ பதிவு இன்று வெளியிடப்படும் என்று வெளியான செய்தி பற்றி கருத்துரைக்கையில் கிட் சியாங் அச்சவாலை விடுத்தார். ஆனால், அமைச்சு வட்டாரத் தகவலின்படி அது பின்னொருநாளில் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.
போலீசாரிடம் 73 மணி நேரம் ஓடும் 43 வீடியோ பதிவுகள் இருப்பதாக அப்பேரணியில் நடந்த வன்செயல்கள் பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சுயேட்சை விசாரணைக்குழு கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.
“பெர்சே பேரணியில் என்ன நடந்தது என்பது குறித்து தாங்களாகவே ஒரு முடிவு எடுக்க மக்களை அனுமதிக்க ஹிசாமுடின் தயார் என்றால், அவர் அந்த முழு 73 மணி நேர வீடியோ பதிவை வெளியிடத் தயாரா?”, என்று லிம் கிட் சியாங் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.