மைரா ‘இண்டர்போல் பட்டியலில் இல்லை, சுதந்திரமாக ஐரோப்பாவில் பயணம் செய்கிறார்’

இண்டர்போல் என்னும் அனைத்துலகப் போலீசின் ‘தேடப்படுவோர்’ பட்டியலில் தாம் இருப்பதாகச் சொல்லப்படுவதை கஸக்ஸ்தானைச் சேர்ந்த மைரா நஸர்பயேவ்  தமது பேச்சாளர் வழி மறுத்துள்ளார்.

போலீசார் மைராவைக் கைது செய்யவில்லை என்பதையும் ஐரோப்பியப் பயணத்தை அவர் தொடங்கியிருப்பதையும் நிரூபிப்பதற்காக மைரா டுபாயில் எடுத்த படம் ஒன்றையும் ரோன் டோரோசியான் என்ற அந்தப் பேச்சாளர் வழங்கியுள்ளார்.

“ஊடகங்கள் தவறுதலாக இண்டர்போல் தேடுவதாஜ தகவல் வெளியிட்டு விட்டன. ஐரோப்பாவில் அவர் சுதந்திரமாக பயணம் செய்வதை அந்தப் படம் காட்டுகிறது. நஸர்பயேவ் குடும்பம் பாசத்துகுரியவர்களுடன் நேரத்தைச் செலவிடத் திட்டமுள்ளது,” என அந்தப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

மைராவின் புதல்வர் டேனியர் நஸர்பயேவ்-க்கும் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வி நூர்யானா நாஜ்வாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள விஷயங்கள் அபத்தமானவை என்றும் தமது குடும்பத்துக்கு அவை தேவை இல்லாத அவமானத்தைக் கொண்டு வந்து விட்டதாகவும் மூன்று வரிகளைக் கொண்ட அந்த அறிக்கையில் மைரா குறிப்பிட்டுள்ளார்.

“அந்த அவதூறான குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை. எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சுமத்தப்பட்டவை,” என்றும் மைரா சொன்னார்.

அமெரிக்காவில் மைராவின்- கணவர் அல்லது முன்னாள் கணவரான போலாட் நஸர்பயேவ் தொடுத்துள்ள வழக்கில் மைராவும் அவருடைய முந்திய திருமணத்தின் மூலம் பிறந்த டேனியரும் 20 மில்லியன் அமெரிக்க டாலர் பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்தச் செய்தியை நியூயார்க் போஸ்ட் நாளேடு வெளியிட்டது.

மைராவை இண்டர்போல் தேடி வருவதாக கூறப்படுவதை போலாட் கண்டு பிடித்த பின்னர் 2009ம் ஆண்டு மைராவுடனான திருமணத்தை ரத்துச் செய்து விட்டதாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஏடு கூறியது.

டேனியர் ஏமாற்று வேலைகள் மூலம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்திகளை மறுத்துள்ள மைரா, போலாட்-டுக்கு தாம் இன்னமும் மனைவி தான் என்றும்  கூறியுள்ளார்.

இதனிடையே அந்தக் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என நஜிப் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்றும் நிராகரித்துள்ளது.