300 பிஎன் உறுப்பினர்கள் பிகேஆரில் சேர்கிறார்கள்

கெராக்கான், இந்தியர் முற்போக்கு முன்னணி, மஇகா ஆகிய கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 300பேர் பிகேஆரில் சேர விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்றிரவு பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பல இனங்களையும் சேர்ந்த 5,000பேர் திரண்டிருந்த கூட்டத்தில் சொலிடேரிட்டி அனாக் மூடா மலேசியா தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரினிடமிருந்து(ச்சேகு பார்ட் என்ற பெயரில் பிரபலமாக விளங்குபவர்) அவர்களின் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டார்.

“இது (பினாங்கு)அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மானுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும்”, என்று பட்ருல் கூறினார்.

அன்வார், “பிகேஆர் குடும்பத்தில்” இணைந்த அந்த 300பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் அவர், 2008 பொதுத் தேர்தலில் நிபோங் தெபால் நாடாளுமன்றத் தொகுதியில் டான் டீ பெங்கை வேட்பாளராக களம் இறக்கியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“இம்முறை தகுதியானவர்களை, நல்ல கொள்கைகளுக்காகவும் நியாயத்துக்காகவும் போராடுவோரைத்தான் தேர்ந்தெடுப்போம்”, என்றார்.

முன்னாள் கெராக்கான் தலைவரான டான், பிகேஆரில் சேர்ந்து 2009-இல் அதிலிருந்து விலகி பார்டி கித்தாவுக்குச் சென்று அதன் பினாங்கு தலைவரானார்.ஆனால், இப்போது அதிலும் அவர் இல்லை.கட்சித் தலைவர் ஜைட்  இப்ராகிமை எதிர்த்தார் என்பதற்காக அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பல பிகேஆர் தலைவர்கள், சுய நலத்தை முன்னிறுத்தி கட்சியிலிருந்து விலகிச் சென்றது குறித்து அன்வார் வருத்தம் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர்முன்னாள் பினாங்கு பிகேஆர் தலைவரும் பாயான் பாரு எம்பி-யுமான ஸஹாரின் முகமட் ஹாஷிம். “ பணக்காரராகும் நோக்கத்தில் குத்தகைத் திட்டங்களைத் தேடி அலைந்தவர்” என்றவர் குறிப்பிட்டார்.

டான் கட்சியிலிருந்து விலகிய காலத்தில்தான் அவரும் விலகினார்.பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-குடன் ஒத்துப்போக முடியாதபடிக்கு கருத்துவேறுபாடு கொண்டிருப்பதாகக் கூறிய ஸஹாரின் அவரது ஆட்சியை வெளிப்படையாகவே குறைகூறினார்.

அன்வார் தம்முரையில், பக்காத்தான் இலவசக் கல்வி, பெட்ரோல் விலைக் குறைப்பு, பினாங்கில் மோட்டார் சைக்கிள்களுக்கான டோல் கட்டணத்தை இரத்துச் செய்தல் முதலிய திட்டங்களைக் கொண்டுவரும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

வாண வேடிக்கைகளுடன் நேற்றைய நிகழ்வு முடிவுற்றது.