கிளந்தானின் எண்ணெய் உரிமையைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஒன்று, தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் கிளந்தானுக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவைத் திரெங்கானுவுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் பாஸ் ஆட்சியில் உள்ள அம்மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகும் என்றும் குறைகூறியுள்ளது.
Gabungan Profesional Tuntut Royalti, Pendaratan Minyak & Gas Negeri Kelantan என்னும் அந்த அமைப்பின் செயலாளர் முகம்மட் ஹிஷாமுடின் கசாலி நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறினார்.
தம் கூற்றுக்கு ஆதாரமாக கடந்த வெள்ளிக்கிழமை மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளிவந்த செய்தியை மேற்கோள் காட்டிய அவர், பெட்ரோனாஸ் அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கோரினார்.
PM302, PM325, PM326B ஆகிய தொகுதிகளில் உள்ள எரிவாயு 300கிமீ குழாய்களின்வழியாக திரெங்கானு, கெர்தேயில் உள்ள எரிவாயு ஆலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று அச்செய்தி கூறிற்று.
“கிளந்தான் கடலில் கிடைக்கும் எரிவாயு, திரெங்கானுவுக்குக் கொண்டு செல்வது ஏன்?”, என்று ஹிஷாமுடின் வினவினார்.
“எரிவாயு உள்ள இடத்திலிருந்து கிளந்தானின் பாச்சோக் பந்தாய் செனோக் 140கிமீட்டரிலிருந்து 160கிமீட்டர் தூரத்தில் இருக்கிறது.ஆனால், கெர்தே இருப்பது 300கிமீட்டருக்கு அப்பால்”, என்றவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எரிவாயுவைச் சேமிக்கவும் பதப்படுத்தவும், மற்ற இடங்களுக்குக் கொண்டுசெல்வதகான வசதிகளையும் கிளந்தானில் ஏற்படுத்திக்கொள்வதுதான் நல்லது என்று அந்த அமைப்பு கூறிற்று.
“இதனால் செலவுகள் குறையும்.கிளந்தானில் நல்லதொரு பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டு நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும்”, என்று ஹிஷாமுடின் கூறினார்.
கிளந்தான் அரசு, கிளந்தான்-தாய்லாந்துக்கு அப்பால் எடுக்கும் எண்எண்ய்க்காக பெட்ரோனாஸ் ஆண்டுக்கு ரிம800மில்லியன் உரிமத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் 2005-இலிருந்து அது கொடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறது.
உரிமப் பணம் கொடுக்கவில்லை என்று கூறி பெட்ரோனாசுக்கு எதிராக கடந்த ஆண்டு அது வழக்கும் தொடர்ந்தது.
ஆனால், எண்ணெய் உரிமத் தொகைக்குப் பதில் கிளந்தானுக்கு நல்லெண்ணத் தொகை வழங்க புத்ரா ஜெயா முன்வந்தது.