சிகாமட் சீனமொழிப்பள்ளி: இன்னொரு மாபெரும் பேரணி

மே 20, 2012 இல் குவாந்தானில் நடத்தப்பட்ட ஒரு பெரும் பேரணி பகாங் மாநில தலைநகரில் ஒரு சீனமொழி இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு அரசாங்கத்தை ஒப்புக்கொள்ள வைப்பதில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து, சீன கல்விமான்கள் அதே சாதனையை மீண்டும் படைக்கும் திட்டம்  ஒன்றை கொண்டுள்ளனர். இம்முறை அது பிஎன்னின் கோட்டையான ஜொகூரில் நடத்தப்படும்.

சீனமொழிப்பள்ளிகள் மேலாளர் வாரியங்களின் மத்திய அமைப்பான டோங்  ஜோங் மற்றும் ஜொகூரிலுள்ள சீன கல்விக்குழுக்களும் மன்றங்களும் கூட்டாக இப்பேரணியை சிகாமட், பாடாங் கம்போங் அப்துல்லாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தவிருக்கின்றனர். குறைந்தது 2,000 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் எடுத்துக்கொண்ட செக் ஹவா சுயேட்சை சீன உயர்நிலப்பள்ளியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் அல்லது ஒரு புதிய சுயேட்சை சீனமொழிப்பள்ளியை சிகாமட்டில் அமைக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் சம்மதிக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

“மக்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு சிகாமட்டில் ஒரு சுயேட்சையான சீனமொழி உயர்நிலைப்பள்ளி அமைக்க விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று கடந்த வாரம் டோங் ஜோங் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

ஜூலை 29 இல் நடைபெறவிருக்கும் அப்பேரணியில் மக்கள் சிவப்பு நிற உடையணிந்து பங்கேற்குமாறு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சீன அமைப்புகள் அவற்றின் உறுப்பினர்களை அப்பேரணிக்கு அழைத்துச் செல்ல பஸ்களை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து சிகாமட் சீன சமூகம் அங்கு ஒரு சுயேட்சை சீனமொழி உயர்நிலைப்பள்ளி வேண்டும் என்று கோரிவருகிறது.

சிகாமட்டில் இயங்கிவந்த முதலாவதான செக் ஹவா சுயேட்சை சீனமொழி உயர்நிலைப்பள்ளி கல்விச் சட்டம் 1961 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தேசிய இடைநிலப்பள்ளியாக மாற்றப்பட்டது.

நாடுதழுவிய அளவில் தற்போது 60 சுயேட்சை சீனமொழி உயர்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் மாண்டரின் போதனை மொழியாக இருந்து வருகிறது. அவற்றின் சொந்த மேலாளர் வாரியத்தால் அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுவா சாடினார்

சிகாமட்டில் பேரணி நடத்தும் திட்டம் மசீச தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் கோபத்தை மூட்டியுள்ளது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கும் முன்னர் சீனமொழிக் கல்வி பிரச்னையைக் கிளப்பி விட்டு சுயவிளம்பரம் தேடிக்கொள்வதோடு மசீச மற்றும் பிஎன் ஆகியவற்றுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடுகிறது  என்று டோங் ஜோங்கை அவர் சாடினார்.

சிகாமட்டில் ஒரு சுயேட்சை சீனமொழி உயர்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலாக மனு எதனையும் டோங் ஜோங் தாக்கல் செய்யவில்லை என்று கடந்த வாரம் சுவா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், டோங் ஜோங்கின் தலைவர் யாப் சின் தியான் இக்கூற்றை மறுத்ததோடு, 1986 ஆம் ஆண்டில் சிகாமட் சீன சமூகம் ஒரு குழுவை அமைத்து ஜொகூர் மாநில கல்வி இலாகவுக்கு ஒரு மனுவை அவ்வாண்டு ஜூலை 3 இல் தாக்கல் செய்தது என்று கூறினார்.

1986 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மனுவுக்கு மூன்று மாதத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்று மசீச அதன் உத்தரவாதத்தை அளித்தது என்று யாப் கூறினார். ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜொகூர் கல்வி இலாகா அந்த மனுவை நிராகரித்தது.

அதிலிருந்து, சிகாமட்டில் சுயேட்சை சீனமொழி உயர்நிலைப்பள்ளி நிறுவுவதற்கான மனு ஆவணங்கள் அரசாங்கத்திடம், பிரதமரும் துணைப் பிரதமரும் உட்பட, குறைந்தது ஏழு தடவைகளில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த தெனாங் இடைத் தேர்தலின்போது இப்பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டது.

ஜொகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஓத்மான் அப்பள்ளியைக் கட்டுவதற்கு நிலம் வழங்க அப்போது ஒப்புக்கொண்டாலும் அவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசாங்கம் என்று கூறியிருந்தார்.

தற்போது இயங்கிவரும் ஒரு சுயேட்சை சீனமொழி உயர்நிலைப்பள்ளி சிகாமட்டில் ஒரு கிளையை அமைக்க அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசிக்கும் என்றும், இவ்விவகாரம் குறித்து தாம் பிரதமர் நஜிப்புடன் விவாதிக்கப்போவதாகவும் துணைப் பிரதமர் முகைதின் யாசின் தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால், அந்த இடைத் தேர்தலுக்குப் பின்னர் அப்பள்ளி குறித்த எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

அரசாங்கம் இப்பிரச்னையைத் தீர்க்கத் தவறுமேயானால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் ஓர் அமைச்சரையும் ஒரு துணை அமைச்சரையும் இழக்க நேரிடும். ஏனென்றால் ஆளும் கூட்டணி 1986 ஆம் ஆண்டில் இது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது ஜோகூர் மாநில சீன வாக்களர்களின் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது.

சிகாமட் பகுதியில் உள்ள இரு நாடாளுமன்ற தொகுதிகள் – சிகாமட் மற்றும் லாபீஸ் – பிரதிநிதிகளான மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் விவாசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை துணை அமைச்சர் சுவா டீ யோங் ஆகியோர் முறையே 2,991 மற்றும் 4,094 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றனர்.

இரு தொகுதிகளிலும் கிட்டத்தட்ட பாதியாக இருக்கும் சீன வாக்காளர்களிடத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் இத்தொகுதிகளை எதிரணிக்கு மாற்றிவிடும்.

வரலாறு மீண்டும் திரும்பலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனமொழிப்பள்ளி குறித்து அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் 1990 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிஎன் ஜெமெந்தா மற்றும் லாபீஸ் (அப்போது லாபீஸ் ஒரு சட்டமன்ற தொகுதியாகும்) ஆகிய இரு மாநில சட்டமன்ற தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டது.