நஜிப், ரோஸ்மா விண்ணப்பம் அடுத்த வியாழக்கிழமை விசாரிக்கப்படும்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் தாங்கள் சாட்சிகளாக ஆஜராவதைக் கட்டாயப்படுத்தும் சப்பீனாவைத் தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் சமர்பித்துள்ள விண்ணப்பத்தை அடுத்த வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செவி மடுக்கும்.

நீதிபதி அறையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சந்தித்த பின்னர் அந்தத் தகவலை சொலிஸிட்டர் ஜெனரல் ll முகமட் யூசோப் ஜைனல் அபிடினும் அன்வாருடைய பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர் சங்கர நாயரும் உறுதி செய்தார்கள்.

நஜிப்பும் ரோஸ்மாவும் கிரிமினல் பதிவகத்தில் தங்கள் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்கள். அவர்களை நான்கு வழக்குரைஞர்கள் பிரதிநிதித்தனர்.

நீதிமன்றத்திற்கு அந்த விவகாரம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டு வரப்பட்ட பின்னர் நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா அந்த முடிவைச் செய்தார்.

நஜிப்பையும் ரோஸ்மாவையும் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் யாரும் அங்கு இல்லை.

அவர்களை முன்னாள் டிபிபி சாலேஹுடின் சைடினும் மூத்த கிரிமினல் வழக்குரைஞர் ஹிஷாம் தே போ தெய்க், எம் ஆதிமூலம் , காஸி இஷாக் ஆகியோர் பிரதிநிதித்தனர்.