ஒரு மாளிகையை வாங்கிப் பின்னர் அதைத் தம்மிடம் விற்குமாறு ஒரு மேம்பாட்டாளரைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுவதை சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார், முகம்மட் கீர் தோயோ மறுத்தார்.
இன்று ஷா ஆலம் உயர்நீதி மன்றத்தில் தமக்கு எதிரான ஊழல் வழக்கில் சாட்சியமளித்த கீர், 2004-இல் ஒரு சந்திப்பின்போது டிடாமாஸ் இயக்குனர் சம்சுடின் ஹைய்ரோனியை ஒரு பங்களாவை வாங்குமாறு தாம் கேட்டுக்கொள்ளவில்லை என்றார். அப்படி ஒரு சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
சம்சுடினிடமிருந்து இரு வீட்டுமனைகளையும் ஒரு வீட்டையும் கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் கூறி குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ் கீர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த மாளிகை, சந்தை விலையைவிடவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்றும் சம்சுடினின் நிறுவனங்களுக்கு அரசாங்கக் குத்தகைகள் வழங்கப்படுவதில் காண்பிக்கப்படும் சலுகைகளுக்குக் கைம்மாறாக அவ்வாறு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆகஸ்ட் 8-இல், கீர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதி அவர்மீது வழக்கு தொடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக முடிவு செய்து கீர் எதிர்வாதம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இன்று நீதிபதி மொஹ்தாருடின் பாகி-முன் முன்னிலையான கீர் அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் காட்சியளித்தார்.
முதன்முறையாக அந்த வீட்டைப் பார்த்தபோது இத்தாலிய பாணியில் கட்டப்பட்டிருந்த அது தம்மைக் கவரவில்லை என்று கீர் கூறினார்.
பிறகு ஏன் 2007-இல் அதை அவர் வாங்கினார் என்று வினவப்பட்டதற்கு 2004-இல் பார்த்ததைவிட அது மாறுபட்ட வீடாகக் காட்சி தந்தது என்றார். அப்போது அது முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தது என்றும் அவர் சொன்னார்.
“(புதுப்பிக்கும் வேலைகள் நிறைய நடந்துகொண்டிருந்த) அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்தது. அந்த நிலையில் என் விருப்பத்துக்கு ஏற்ற முறையில் அதில் மாற்றங்களைச் செய்ய வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். நான் ஜாவானிய வம்சாவளியைச் சேர்ந்தவன். ஜாவானிய பாணியில் ஒரு வீட்டை கட்டுவதே என் விருப்பமாக இருந்தது”, என்றவர் விளக்கினார்.
சம்சுடினைத் தனிப்பட்ட முறையில் தமக்குத் தெரியாது என்று கூறிய கீர், ஒரு மந்திரி புசார் என்ற முறையில் பல மேம்பாட்டளர்களையும் தெரியும் என்றும் அவர்களில் ஒருவர்தான் சம்சுடின் என்றும் குறிப்பிட்டார்.
சம்சுடினுக்கோ அவரின் நிறுவனங்களுக்கோ சிறப்புச் சலுகை காட்டியதில்லை என்றும் அவர் சொன்னார். அவரின் நிறுவனங்களுக்கு ஆதரவுக் கடிதம் கொடுத்ததுண்டு. சிலாங்கூர் அரசில் ஆதரவுக் கடிதங்கள் கொடுப்பது ஒரு சாதாரண நடைமுறைதான் என்றார்.
“ஒவ்வொரு நாளும் 10-இலிருந்து 15 கடிதங்கள்வரை எழுதுவதுண்டு.”
இவ்வாண்டுத் தொடக்கத்தில் விசாரணை தொடங்கியபோது தம்மை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று கீர் கேட்டுக்கொண்டார் என்று சம்சுடின் எம்ஏசிசி-யிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருப்பதையும் அவர் மறுத்தார்.
சாட்சியமளிப்பின்போது கீர், தாம் ஷா ஆலம் ஜாலான் சுவாசாவுக்கு அப்பால் வீட்டுமனைகள் எட்டிலும் பத்திலும் அமைந்துள்ள வீட்டைச் சந்தைவிலைக்கே வாங்கியதாகவும் சாதித்தார்.
“ரஹிம் அண்ட் கோ சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வீட்டின் விலையை மதிப்பிட்டிருந்தது. அதை, அவரும்(சம்சுடின்) ஒப்புக்கொண்டார்”. எதிர்த்தரப்புத் தலைமை வழக்குரைஞர் எம். ஆதிமூலம் விசாரணை செய்தபோது கீர் பலமுறை இதைத் திருப்பிக் கூறினார்.
தமக்குத் தெரிந்தவரை, சம்சுடின் ரிம3.5மில்லியனுக்கு வீட்டை விற்க ஒப்புக்கொண்டார் என்று கீர் கூறினார். விலையில் உடன்பாடு இல்லை என்பதையோ வீட்டின் விலையைக் கூட்டிக்காட்டும் இன்னொரு விலை மதிப்பீடு இருப்பதாகவோ அவர் ஒருபோதும் காண்பித்துக் கொள்ளவில்லை.
வழக்கு விசாரணை நாளை தொடர்கிறது.